பொதுமக்களிடம் ஒரு பைசாகூட யுபிஐ கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் இதை உறுதி செய்ய புதிய கண்காணிப்பு நடைமுறை அமல் செய்யப்படும் என்றும் மத்திய நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 2016-ம் ஆண்டு இந்தியாவில் யுபிஐ டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அறிமுகம் செய்யப்பட்டது. தற்போதுவரை கூகுள்பே, போன் பே, பேடிஎம், பீம், அமேசான் பே உள்ளிட்ட யுபிஐ பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிக்கப்படவில்லை. இந்த சூழலில் தேசிய பணப் பரிவர்த்தனை கழகம் (என்பிசிஐ) கடந்த 16-ம் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. இதன்படி ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிகம் சார்ந்த யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீதம் வரை கட்டணம் விதிக்கப்படும். வரும் அக்டோபர் 15-ம் தேதி முதல் யுபிஐ புதிய கட்டண நடைமுறை அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
எனினும் தனிநபர்களுக்கு இடையிலான யுபிஐ பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்று என்பிசிஐ திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது. வணிகர்களுக்கான யுபிஐ கட்டண விவரமும் முன்கூட்டியே வெளியிடப்பட்டிருக்கிறது.
இதன்படி ரூ.2,000 வரையிலான வணிக யுபிஐ பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் கிடையாது. அதற்கு மேல் ரூ.3,000 வரை ரூ.12, ரூ.50,000 வரை ரூ.200, ரூ.75,000-க்கு மேல் ரூ.300 கட்டணத்தை வணிகர்கள் செலுத்த வேண்டும் என்று என்பிசிஐ அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: வணிகர்களுக்கான யுபிஐ கட்டண நடைமுறை வரும் அக்டோபர் 15-ம் தேதி அமலுக்கு வருகிறது.
பொதுமக்களிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படாது என்று திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. எனினும் யுபிஐ கட்டணத்தை வணிகர்கள் தங்கள் மீது சுமத்துவார்கள் என்ற அச்சம் பொதுமக்களிடம் நிலவுகிறது. இந்த அச்சத்தைப் போக்க புதிய கண்காணிப்பு நடைமுறையை அமல்படுத்த மத்திய நிதியமைச்சகம் திட்டமிட்டு உள்ளது.
இதன்படி வணிகர்களின் யுபிஐ வணிக பரிவர்த்தனைகள் நாள்தோறும் கண்காணிக்கப்படும். குறிப்பாக ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிகம் சார்ந்த யுபிஐ பரிவர்த்தனைகள் ஆய்வு செய்யப்படும். இதன்மூலம் யுபிஐ கட்டணத்தை பொதுமக்கள் மீது வணிகர்கள் சுமத்துவது முழுமையாக தடுக்கப்படும்.
பொதுமக்களிடம் யுபிஐ கட்டணத்தை வசூலிப்பது கிரிமினல் குற்றம் ஆகும். இதுதொடர்பாக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
மின்சாரம், குடிநீர், சமையல் காஸ், பெட்ரோல், மொபைல்போன், இன்சூரன்ஸ், பள்ளி, கல்லூரி கட்டணங்கள் சார்ந்த வணிக யுபிஐ பரிவர்த்தனையின்போது பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகத்திடம் புகார் அளிக்கலாம். இந்த புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பான விரிவான கண்காணிப்பு நடைமுறையை வரையறுத்து வருகிறோம். இதுகுறித்த முழுமையான விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்.
நாடு முழுவதும் சுமார் 86 சதவீத யுபிஐ டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் தனிநபர்களுக்கு இடையில் நடைபெறுகிறது. வணிகம் சார்ந்து 14 சதவீத யுபிஐ பரிவர்த்தனைகள் மட்டுமே நடைபெறுகின்றன. எனவே புதிய கட்டண நடைமுறையால் யுபிஐ பரிவர்த்தனைகள் எந்த வகையிலும் குறையாது. இவ்வாறு நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

