ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு கால சேவைப் பணிகள் குறித்த ஆங்கில நூலை பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எழுதி உள்ளார். இந்நூலை, குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று டெல்லியில் வெளியிட்டார்.
ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்கின்(ஆர்எஸ்எஸ்) நூற்றாண்டு கால சேவைப் பணிகள், சமூகப் பொறுப்பு மற்றும் தேசக் கட்டமைப்பில் அதன் பங்களிப்புகள் தொடர்பாக முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ‘A Century of Service – 100 Years of the RSS in 100 Acts of Seva” (சேவையின் நூற்றாண்டு – 100 சேவைச் செயல்பாடுகளில் ஆர்எஸ்எஸ்-ஸின் 100 ஆண்டுகள்)’ என்ற ஆங்கில நூலை எழுதியுள்ளார். இதன் வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது.
இந்நூலை குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டு பேசியதாவது: ஓர் இயக்கம், ஒரு நூற்றாண்டு காலம் தொடர்ந்து சேவை செய்ய முடியுமா? அதுவும் பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையிலும் தொடர்ந்து செயல்பட முடியுமா? என்ற சவால்களுக்கு இடையிலும் சேவை செய்து வரும் இயக்கமாக ஆர்எஸ்எஸ் திகழ்கிறது.
ஒவ்வொரு தேசபக்தரின் உள்ளத்திலும் ‘சேவை’ என்ற மகத்தான உணர்வு எவ்வாறு உருவாகி, அது சமூகப் பணியாக வெளிப்பட்டது என்பதை இந்நூல் ஆவணப்படுத்தியுள்ளது.
பதிவு செய்யப்படாத நற்செயல்கள் காலப்போக்கில் மறைந்து போகக்கூடும். அவற்றை நூல்களாக ஆவணப்படுத்தி, எதிர்கால தலைமுறைக்கு உண்மையான வரலாற்றை வழங்குவது அவசியம். சமூகத்தின் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்களுக்கு மட்டுமல்லாமல், ஏழைகள், விளிம்புநிலை மக்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கும் ஆர்எஸ்எஸ் சேவை செய்து வருகிறது.
கரோனா பெருந்தொற்று காலத்தில் மக்கள் அச்சத்தில் இருந்தபோதும், ஆர்.எஸ்.எஸ். சேவகர்கள் நாடு முழுவதும் மருந்துகள், உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்த்து, நம்பிக்கையை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இந்தியாவின் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தில் அனைவரது நலனையும் கருத்தில் கொள்ளும் பரந்த சிந்தனை வேரூன்றியுள்ளது. இந்தச் சிந்தனையை மக்களின் மனதில் ஆழமாக பதியச் செய்த ஒரு மாபெரும் இயக்கமாக ஆர்எஸ்எஸ் திகழ்கிறது.
இந்நூல் ஆர்எஸ்எஸ்ஸின் நூற்றாண்டு கால சேவைப் பணிகளை மட்டுமல்லாமல், இந்தியாவின் சேவைப் பாரம்பரியம், பண்பாடு, தேசிய உணர்வையும் எதிர்கால தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் முக்கியமான ஆவணமாக அமையும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம், நூலாசிரியர் தமிழிசை சவுந்தரராஜன், அல்லயன்ஸ் பதிப்பகத்தின் உரிமையாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

