தமிழகத்தில் உற்பத்தி ஆலைகள், உலகளாவிய திறன் மையங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதிகளை நிறுவி விரிவுபடுத்துவதற்காக தமிழக அரசுக்கும், முன்னணி உலகளாவிய நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், ரூ.15,300 கோடிக்கும் அதிகமான முதலீட்டு முன்மொழிவுகள் மூலம் மாநிலத்தில் 10,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முதல்வர் விஜய் முன்னிலையில் 14.9.2026 அன்று இங்கிலாந்து, லண்டனில், தமிழ்நாடு அரசின் முதலீட்டு மேம்பாட்டு முகமையான வழிகாட்டி நிறுவனத்துக்கும், முன்னணி உலகளாவிய நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், ஓர் உலகளாவிய வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம், இந்தியாவில் தனது முதல் புதிய உற்பத்தி ஆலையை தமிழ்நாட்டில் நிறுவுவதற்கான விருப்பக் கடிதத்தை வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் ஹிந்துஜா குழும முதலீடுகளின் தற்போதைய முன்னேற்ற நிலை குறித்து அக்குழுமத்தினர் முதல்வர் விஜய்யை சந்தித்து விளக்கிக் கூறினர்.
வாகன உதிரிபாக உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் மின்கட்டமைப்பு உபகரணங்கள் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், நோக்கக் கடிதமும் சேர்ந்து ரூ.15,300 கோடிக்கும் அதிகமான முதலீடுகளைக் கொண்டிருப்பதோடு, தமிழ்நாட்டில் 10,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்: 45-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டுவரும் முன்னணி பன்னாட்டு நிறுவனமான ‘சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட்’, தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, ஒருங்கிணைப்பு மற்றும் தளவாடங்கள் சார்ந்த வசதிகளை நிறுவுவதன்மூலம் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், மதர்சன் குழுமம் சுமார் ரூ.11,000 கோடி மதிப்பிலான புதிய முதலீட்டு வாய்ப்புகள் மூலம் தமிழ்நாட்டில் சுமார் 7,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த முதலீடுகள், மதர்சன் குழுமத்தின் பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த கூட்டு நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்பக் கூட்டாண்மையர்களுடன் இணைந்து மேற்கொள்ளப்படவுள்ளன.
Advertisement
இத்திட்டங்கள் தமிழ்நாட்டுக்கு மேம்பட்ட உற்பத்தித் திறன்கள், உலகளாவிய பொறியியல் நிபுணத்துவம் மற்றும் புதிய தொழில்நுட்பக் கூட்டாண்மைகளைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில், சர்வதேச வாகன உற்பத்தி மற்றும் மேம்பட்ட உற்பத்தி சார்ந்த மதிப்புச் சங்கிலிகளுடன் மாநிலத்தின் ஒருங்கிணைப்பை இவை வலுப்படுத்தும்.
இந்த முதலீடு, உயர் மதிப்புமிக்க உற்பத்தி, பொறியியல், வடிவமைப்பு மற்றும் ஏற்றுமதி சார்ந்த தொழில்களுக்கான ஒரு முக்கிய இடமாகத் தமிழ்நாட்டின் நிலையை மேலும் வலுப்படுத்துவதுடன், உற்பத்தி மதிப்புச் சங்கிலியில் தமிழ்நாடு அடுத்தகட்டத்திற்கு முன்னேறவும் வழிவகுக்கும்.
வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனத்துடன் புரிந்தணர்வு ஒப்பந்தம்: பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்ட, திறன்மிக்க மின்மாற்றிகளைத் தயாரிக்கும் வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனம், திருவள்ளூர் மாவட்டத்தில் தனது மின்மாற்றி உற்பத்திப் பணிகளின் அடுத்தகட்டத்திற்காக ரூ.300 கோடி முதலீடு செய்யவுள்ளது. இதன்மூலம் 400 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
இந்த ஆலை, மேம்பட்ட மின் மற்றும் விநியோக மின்மாற்றி உற்பத்தியில் தமிழ்நாட்டின் உற்பத்தித் திறன்களை மேம்படுத்துவதோடு, உள்ளூர் மதிப்புக் கூட்டலையும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விரிவாக்கம், தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் மின்கட்டமைப்பு உபகரணங்கள் உற்பத்திக்கான ஒரு முன்னணி மையமாகத் தமிழ்நாட்டின் நிலையை வலுப்படுத்தும்.
தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை அமைத்திட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை விரிவுபடுத்துவதற்கும், நிறுவுவதற்கும் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஸ்வீடனின் சிக்மா டெக்னாலஜி குழுமம், எம்பெடட் சிஸ்டம்ஸ், மின்மயமாக்கல் மற்றும் தொழில்துறை டிஜிட்டல்மயமாக்கல் ஆகிய துறைகளில் 600 உயர் மதிப்பு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், திருச்சிராப்பள்ளி மற்றும் சென்னையில் உள்ள தனது உலகளாவிய திறன் மையங்களை, தனது இந்திய நிறுவனமான ஸ்ரியா சொல்யூஷன்ஸ் மூலம் விரிவாக்குவதற்கு தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் ஏர்ன்ஸ்ட் & யங் நிறுவனம் ஒரு சர்வதேச நிறுவனத்துக்காக தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையத்தை அமைக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ‘கட்டு-இயக்கு-மாற்றியமை-மாற்று’ ஏற்பாட்டின் கீழ், இந்த மையத்தை நிறுவுவதற்கும், அதன் ஆரம்பகட்ட செயல்பாடுகளுக்கும் ஏர்ன்ஸ்ட் & யங் நிறுவனம் ஆதரவளிக்கும். பின்னர், அம்மையம் அச்சர்வதேச நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். இந்த உலகளாவிய திறன் மையம் சுமார் ரூ.1,000 கோடி முதலீட்டுடன், 2,000-க்கும் மேற்பட்ட உயர் மதிப்புள்ள புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்மையம், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சென்னையில் உள்ள மவுண்ட்- பூந்தமல்லி சாலைப் பகுதியிலுள்ள GCC வழித்தடத்தில் அமையும்.
ரூ.3,000 கோடி முதலீடு செய்ய விருப்பக் கடிதம்: ஐரோப்பாவின் முன்னணி வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம் ஒன்று, இந்தியாவில், தான் மேற்கொள்ளவிருக்கும் ரூ.3,000 கோடி முதலீட்டிற்கு தமிழ்நாட்டையே விரும்பத்தக்க இடமாகக் கருதுவதாகத் தனது விருப்பத்தைத் தெரிவித்து, முதல்வர் விஜய் முன்னிலையில், தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரிடம் தனது விருப்பக் கடிதத்தை சமர்ப்பித்தது.
முன்மொழியப்பட்ட இந்த முதலீட்டைச் சாத்தியமாக்கவும், மாநிலத்தில் அதன் செயல்பாடுகளை வெற்றிகரமாக நிறுவவும் தேவையான அனைத்து ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்குவதாகத் தமிழ்நாடு அரசு அந்நிறுவனத்திற்கு உறுதியளித்துள்ளது.
ஹிந்துஜா குழுமத்தின் தலைமை நிர்வாகிகளுடன் சந்திப்பு: அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் தீரஜ் ஹிந்துஜா, ஃபினோலெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் பிரகாஷ் பி. சாப்ரியா, இயக்குநர் திருமதி ரீட்டா ஹிந்துஜா சாப்ரியா, ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் ஆகியோர் லண்டனில் முதல்வர் விஜய்யை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தனர்.
இச்சந்திப்பின்போது, ஆகஸ்ட் 2026-ல் நடைபெற்ற ‘வெற்றி’ தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது மேற்கொள்ளப்பட்ட ரூ.2,500 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் உட்பட, தமிழ்நாட்டில் ஹிந்துஜா குழுமம் மேற்கொண்டுள்ள முதலீடுகளின் முன்னேற்றம் குறித்து ஹிந்துஜா, முதல்வரிடம் விளக்கினார். தமிழ்நாட்டில் தொடர்ந்து முதலீடு செய்வதிலும், வணிகத்தை விரிவுபடுத்துவதிலும் ஹிந்துஜா குழுமத்திற்கு உள்ள உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில், குறிப்பாகக் காற்றாலை மின்சக்தித் துறையில் முதலீடுகளை மேலும் அதிகரிப்பதில் இக்குழுவினர் விருப்பம் தெரிவித்தனர். மேலும், தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் வணிக வாகனங்களின் ஏற்றுமதியை அதிகரிப்பது குறித்தும், வாகன உற்பத்தித் துறைக்கான ஏற்றுமதி மையமாகத் தமிழ்நாட்டின் பங்கை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இச்சந்திப்பின்போது கலந்தாலோசிக்கப்பட்டன.
மேற்கண்ட முதலீடுகள் தமிழக இளைஞர்களின் இலட்சியங்களை பிரதிபலிப்பதாகவும், மேம்பட்ட உற்பத்தி, உலகளாவிய திறன் மையங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றிற்கான உலகளாவிய மையமாக தமிழ்நாட்டின் நிலையை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் – இந்தியா விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் உருவாகும் குறிப்பிடத்தக்க வாய்ப்புகளை முதல்வர் விஜய் எடுத்துரைத்தார். மேலும், தமிழ்நாட்டுடன் முதலீடு, வர்த்தகம், மூலப்பொருட்கள் கொள்முதல் மற்றும் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இந்த ஒப்பந்தத்தைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு வணிக நிறுவனங்களை ஊக்குவித்தார்.
தமிழகத்தில் முதலீடு செய்யவும், தமிழ்நாட்டுடன் வர்த்தக மற்றும் வணிகத் தொடர்புகளை ஆழப்படுத்தவும் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய முன்னணி நிறுவனங்களுக்கு முதல்வர் விஜய் அழைப்பு விடுத்ததோடு, முதலீடுகளை எளிதாக்குவதிலும், மாநிலத்தில் அவர்களின் வணிகங்களை வெற்றிகரமாக நிறுவி இயக்குவதற்குத் தேவையான தமிழ்நாடு அரசின் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் முதலீட்டாளர்களுக்கு உறுதியளித்தார் என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது..

