விநாயகர் சதுர்த்திக்கு விதை களால் ஆன விநாயகர் சிலையை வீட்டில் வைத்து வழிபட வேண்டும் என்று நடிகர் சிரஞ்சீவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
‘கிரீன் இந்தியா சேலஞ்ச்’ அமைப்பின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சந்தோஷ் குமார், இந்த ஆண்டு முற்றிலும் இயற்கையான முறையில், விதைகளைக் கொண்டு விநாயகர் சிலைகளைத் தயாரித்துள்ளார். இச்சிலையை நடிகர் சிரஞ்சீவி நேற்று ஹைதராபாத்தில் அறிமுகம் செய்தார்.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “வரவிருக்கும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கிரீன் இந்தியா சேலஞ்ச் அமைப்பினர் விதைகளால் ஆன மிக அழகிய விநாயகர் சிலைகளைத் தயாரித்துள்ளனர். இச்சிலைகள் சுற்றுச்சூழலை எந்த வகையிலும் பாதிக்காது. இவற்றை வீட்டில் வைத்து பூஜை செய்த பின்னர், அவரவர் வீடுகளிலேயே தண்ணீரில் கரைக்கலாம்.
அவ்வாறு கரைக்கப்படும் இடத்தில் செடிகள் முளைக்கும். இது விநாயகரின் ஆசீர்வாதம் நமக்குக் கிடைப்பதைப் போன்றதாகும். எனவே, இம்முறை அனைவரும் ‘விதை விநாயகரை’ வைத்து, சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடி மகிழ்வோம்” என்றார். கிரீன் இந்தியா சேலஞ்ச் அமைப்பு இதுவரை இந்தியா முழுவதும் 20 கோடி மரக்கன்றுகளை நட்டு சாதனை படைத்துள்ளது.

