உலகின் மிகச்சிறந்த மற்றும் புகழ்பெற்ற வெண்ணெய் (பட்டர்) தயாரிப்புகளுக்கான சர்வதேசப் பட்டியலை ‘டேஸ்ட் அட்லாஸ்’ தளம் வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் இரு முன்னணி பால் உற்பத்தி பிராண்டுகளின் தயாரிப்புகளான ‘கிர்ஆர்கானிக் ஏ2 கிர் மாட்டு நெய்’ மற்றும் ‘அமுல் தூய்மை நெய்’ ஆகியவை இடம் பிடித்து பெருமை சேர்த்துள்ளன.
சிறந்த தரம், பாரம்பரியம், கைவினை நேர்த்தி மற்றும் உலகளாவிய அங்கீகாரம் ஆகியவற்றின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியலை டேஸ்ட் அட்லாஸ் நிறுவனம் தயார் செய்துள்ளது. அதில், டென்மார்க், இங்கிலாந்து, பெல்ஜியம், பிரான்ஸ், அயர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளின் தயாரிப்புகளுக்கு மத்தியில் இந்தியாவின் அமுல் மற்றும் கிர்ஆர்கானிக் நெய் 6-ம் இடத்தை பிடித்து இந்தச் சிறப்பைப் பெற்றுள்ளன.
இந்திய பிராண்டுகளின் சிறப்பம்சங்கள்: குஜராத்தில் இயற்கை முறையில் பராமரிக்கப்படும் பண்ணைகளில் வளர்க்கப்படும் நாட்டுப்புற ‘கிர்’ ரகப் பசுக்களின் பாலிலிருந்து பாரம்பரிய முறைப்படி கிர்ஆர்கானிக் ஏ2 நெய் தயாரிக்கப்படுகிறது. அதேபோன்று, இந்தியாவின் மிகவும் பிரபலமான அமுல் பிராண்டின் தனித்துவமான மஞ்சள் நிறம், மணமூட்டும் நறுமணம் மற்றும் மணல் போன்ற பாரம்பரியப் பதத்திற்காக அமுல் தூய்மை நெய் சர்வதேச அளவில் புகழ்பெற்றது.
இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ‘பெப்பே சாயா’ மற்றும் ‘வெஸ்டர்ன் ஸ்டார்’ ஆகியவை முதலிடத்தைப் பிடித்துள்ளன. பெல்ஜியம் 2-ம் இடத்தையும், டென்மார்க் 3-ம் இடத்தையும் பெற்றுள்ளன. இவற்றுடன் இங்கிலாந்து (4-ம் இடம்), பிரான்ஸ் (5-ம் இடம்) ஆகிய நாடுகளின் தயாரிப்புகளும், இத்தாலி, நியூசிலாந்து, நார்வே, ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் முன்னணி பிராண்டுகளும் இப்பட்டியலில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

