‘ஆயுஷ்’ படிப்புகளுக்கான தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நீட் தேர்வில் 639 மதிப்பெண் பெற்ற நாமக்கல் மாவட்ட மாணவர் முதலிடம் பெற்றுள்ளார்.
‘ஆயுஷ்’ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை, சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் நேற்று வெளியிட்டார்.
துறைச் செயலர் தாரேஸ் அகமது, இந்திய மருத்துவம் – ஓமியோபதி இயக்குநர் பாலசுப்பிரமணியம், தேர்வுக் குழு செயலர் கரோலின் டெய்சி ராணி, இணை இயக்குநர் (யோகா, இயற்கை மருத்துவம்) என்.மணவாளன், டாம்கால் பொது மேலாளர் வளர்மதி ஆகியோர் உடன் இருந்தனர்.
சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 4,693 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில், நீட் தேர்வில் 720-க்கு 639 மதிப்பெண் பெற்ற நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் பி.கிராந்திக் முதலிடம் பெற்றுள்ளார்.
அரசு ஒதுக்கீட்டுக்கு மொத்தம் உள்ள இடங்களில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 96 இடங்கள் ஒதுக்கீடு செய்யப் படுகின்றன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 906 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இதில் நீட் தேர்வில் 516 மதிப்பெண் பெற்ற நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த பா.தமிழருவி முதலிடம் பெற்றுள்ளார். இணையதளத்தில் பதிவேற்றம் யோகா, இயற்கை மருத்துவம் படிப்புக்கான அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 2,213 பேர் இடம் பெற்றுள்ளனர்.
கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200 பெற்று கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.பாலதர்ஷினி முதலிடம் பிடித்துள்ளார். தரவரிசைப் பட்டியல்கள் www.tnayushselection.org என்ற சுகாதாரத் துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
யோகா, இயற்கை மருத்துவம் படிப்புக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலும், மற்ற 4 படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. முதல் கட்டமாக, யோகா, இயற்கை மருத்துவம் படிப்புக்கு செப்.3-ம் தேதி கலந்தாய்வு தொடங்குகிறது.
அன்றைய தினம் மாற்றுத் திறனாளி, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசு, விளையாட்டு வீரர் ஆகிய சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் நேரடியாக நடைபெறுகிறது.
அதே நாளில் பொதுப் பிரிவு கலந்தாய்வு ஆன்லைனில் (www.tnayushselection.org) தொடங்குகிறது. சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான கலந்தாய்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

