ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் நிர்ணயிக்கப்பட்ட பேருந்து நிறுத்தங்களில் பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என மாநகர போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்ட சுற்றறிக்கை: பேருந்து நிறுத்தங்களில் பயணிகள் குறிப்பாக பெண்கள் பேருந்தை நிறுத்துமாறு சைகை செய்தபோதிலும், சில பேருந்துகள் நிற்காமல் செல்வதாக அரசுக்கு புகார் பெறப்பட்டுள்ளது.
பயணிகளுக்கு சிறப்பான பாதுகாப்பான மற்றும் நம்பகமான பொதுப்போக்குவரத்துச் சேவையை வழங்குவது. மா.போ.கழகத்தின் முதன்மையான கடமையாகும். எனவே, ஓட்டுநர், நடத்துநர்கள் கீழ்க்காணும் அறிவுறுத்தல்களை தவறாது பின்பற்ற வேண்டும்.
சாதாரண கட்டண பேருந்துகள் அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் தவறாது பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்ல வேண்டும். விரைவு, சொகுசு, குளிர்சாதன பேருந்துகள் நிர்ணயிக்கப்பட்ட நிறுத்தங்களில் தவறாது பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்ல வேண்டும்.
பேருந்தை பிடிப்பதற்காக வரும் பயணிகளிடம் கடுமையாகப் பேசுதல் அவமதிக்கும் வகையில் நடந்து கொள்ளுதல் அல்லது பயணிகளை ஏற்ற மறுத்தல் போன்ற செயல்களில் ஓட்டுநர், நடத்துநர்கள் ஈடுபடக்கூடாது.
பேருந்து நிறுத்தங்களை தவிர்த்துச் செல்லுதல், பயணிகளை ஏற்ற மறுத்தல் மற்றும் பயணிகளிடம் முறையற்ற வகையில் நடந்துக்கொண்டால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கிளை மேலாளர்கள், மண்டல மேலாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கண்காணிப்பு அலுவலர்கள் பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் முக்கிய பேருந்து நிறுத்தங்களில் திடீர் ஆய்வுகள் மேற்கொண்டு பேருந்துகள் முறையாக பேருந்து நிறுத்தங்களில் நின்று செல்கின்றனவா என கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.
புதிதாக பணிக்கு வரும் ஓட்டுநர், நடத்துநர்கள் மற்றும் புத்தாக்க பயிற்சிக்கு வரும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு மேற்குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்ற பயிற்சி அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

