அம்மா உணவக ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்த தினகரன் வலியுறுத்தல்

Priya
710 Views
1 Min Read

தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் ஊதியத்தை முதல்வர் உயர்த்த வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஊதிய உயர்வு வழங்கக்கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சிகளில் கருப்பு உடை அணிந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

மிகக்குறைவான ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்கள், அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இயங்கும் உணவகங்கள், தரமான சமையல் உபகரணங்கள் இல்லாததால் உணவின் தரம் குறித்து அவ்வப்போது எழும் பல்வேறு விமர்சனங்கள் என அவலங்களுக்கு மத்தியில் அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் இவை அனைத்தையும் சீர்செய்ய வலியுறுத்தி ஊழியர்களின் போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் சூழலிலும், தவெக ஆட்சிக்கு வந்தபின்பு 630 அம்மா உணவகங்களைச் சீரமைத்து செயல்பாட்டுக்கு கொண்டு வந்திருப்பதாகப் முதல்வர் விஜய் பொய்யான தகவலை கூறியிருக்கிறார். இந்த பேச்சு ஏழை மக்களை வாக்கு அரசியலுக்காக ஏமாற்றும் செயலாகும்.

எனவே, தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதோடு, அங்கு உணவு அருந்த வரும் ஏழை, எளிய மக்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு தரமான மற்றும் சுவையான உணவை வழங்கி, தேவையான அனைத்து விதமான வசதிகளையும் உண்மையாகச் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply