ஜென்- ஸி தலைமுறையினரின் போக்கை விமர்சிக்கும் வகையில், அவர்களை ‘குப்பைத் தலைமுறை’ என்று நடிகையும் எம்.பியுமான கங்கனா ரணாவத் குறிப்பிட்டிருந்தார். இக்கருத்து நாடு முழுவதும் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் சிலர் கங்கனா ரணாவத் தனது திரைப்படங்களில் நடித்த சில சர்ச்சைக்குரிய மற்றும் கவர்ச்சியான கதாபாத்திரங்களின் காட்சிகளைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, அவரை ட்ரோல் செய்யத் தொடங்கினர்.
தனக்கு எதிராகப் பரப்பப்படும் இந்த வீடியோக்கள் குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள கங்கனா, ட்ரோல் செய்பவர்கள் இளம் தலைமுறையினரைத் தவறாக வழிநடத்தக் கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
“ஒரு நடிகையாகத் திரையில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடிப்பது எனது தொழில் சார்ந்த கடமை. அதில் நான் நேர்த்தியாக நடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
ஆனால், சினிமாவில் ஒரு கதாபாத்திரத்துக்காக நடிப்பதும், நிஜ வாழ்க்கையில் வெளிப்படுத்தும் கருத்துகளும் ஒன்றல்ல” என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். திரை வாழ்க்கையையும் நிஜ அரசியலையும் போட்டுக் குழப்ப வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார்.

