யோகி பாபுவின் ‘அர்ஜூனன் பேர் பத்து’ படம் நவ.27-ல் ரிலீஸ்

Priya
896 Views
1 Min Read

யோகி பாபு நாயகனாக நடித்துள்ள ‘அர்ஜுனன் பேர் பத்து’ படம் நவம்பர் 27-ம் தேதி வெளியாகும் என்பதைப் படக்குழு உறுதி செய்துள்ளது.

தேவ் சினிமாஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அர்ஜுனன் பேர் பத்து’. யோகி பாபு நாயகனாக நடித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் ராஜ்மோகன் இயக்கியுள்ளார். நீண்ட நாட்கள் கழித்து யோகிபாபு நாயகனாக நடித்துள்ள இந்தப் படம் அவரின் 300-வது படமாகும்.

பழைய வாகனங்கள் விற்பதில் நடக்கும் மோசடிகள் பற்றியும், அம்மோசடியால் பாதிக்கப்பட்ட மக்களின் வலிகளைப் பற்றியும், இனி பழைய வாகனங்களை வாங்கவிருக்கும் பொது மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் ‘அர்ஜுனன் பேர் பத்து’ இருக்கும் என்கிறது படக்குழு. முன்னதாக இந்தப் படம், ஜூலை 17-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. பின்பு வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் படம், நவம்பர் 27-ம் தேதி வெளியாவதைப் படக்குழு உறுதி செய்துள்ளது. இந்தத் தகவலை தேவ் சினிமாஸ் நிறுவனம் அதன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

அதில், ‘தேதி உறுதி செய்யப்பட்டுவிட்டது. ‘அர்ஜூனன் பேர் பத்து’ படம் நவம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கவுண்ட் டவுன் தொடங்கி விட்டது. பெரிய திரை அனுபவத்துக்கு தயாராகுங்கள்’ எனத் தெரிவித்துள்ளது.

‘அர்ஜூனன் பேர் பத்து’ படத்தில் யோகி பாபுவுக்கு நாயகியாக அனாமிகா மகி நடித்துள்ளார். இவர்களுடன் காளி வெங்கட், அருள்தாஸ், அயலி மதன், சுப்பிரமணியன் சிவா, மைனா நந்தினி, சவுந்தர்யா, சென்ராயன், ஹலோ கந்தசாமி, பாவா லட்சுமணன், ரஞ்சன் குமார், இயக்குநர் லெனின் பாரதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவு பணியை பிரதீப் காளிராஜாவும், படத்தொகுப்பை காசி விஸ்வநாதனும் மேற்கொள்ள, டி.இமான் இசையமைத்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply