தமிழக அரசின் 2026-27-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் ஆகஸ்ட் 5-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக துறைகள் வாரியாக முதல்வர் விஜய் கடந்த ஜூலை 2-ம் தேதி முதல் ஆலோசனைக் கூட்டங்களை நடத்திவருகிறார்.
அதன்படி சட்டம் மற்றும் சிறைகள் சீர்திருத்தப் பணிகள் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் முதல்வர் விஜய், அமைச்சர்கள் சி.டி.ஆர்.நிர்மகுமார், நெ.மரிய வில்சன், தலைமைச் செயலர் எம்.சாய்குமார் மற்றும் துறை சார்ந்த செயலர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் சட்டத் துறையில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளின் செயல்பாடுகளை கேட்டறிந்த முதல்வர் விஜய், சிறைகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே கூட்டுறவுத் துறை குறித்த ஆலோசனைக் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் இளம் பெண்கள் சுயத்தொழில்கள் தொடங்க ‘சிங்கப்பெண்’ மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்காக கூட்டுறவுத்துறை மூலமாக மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.7,000 கோடி வட்டியில்லா கடன் வழங்கப்பட உள்ளது. வரும் பட்ஜெட்டில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

