தமிழகத்தில் ஜூலை 26 வரை மிதமான மழை வாய்ப்பு

Priya
28 Views
1 Min Read

தமிழகத்தில் நாளை முதல் ஜூலை 26-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (ஜூலை 21) ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசான மழையும், 22, 23 தேதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

24-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

25, 26 தேதிகளில் தமிழத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் 24-ம் தேதி வரை உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக சேலம் மாவட்டம் சங்கரி துர்க்கத்தில் 5 செமீ, சேலத்தில் 3 செமீ, கோவை மாவட்டம் சின்னக்கல்லார், சோலையார், சின்கோனா, நீலகிரி மாவட்டம் செருமுள்ளி, வூட் பிரையர் எஸ்டேட், மதுரை மாவட்டம் மேட்டுப்பட்டி உள்ளிட்ட இடங்களில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply