பசு வதை குறித்த தீர்ப்பில் மேல்முறையீடு கூடாது: தமிழக அரசுக்கு பாஜக வலியுறுத்தல்

Priya
5 Views
2 Min Read

 பசு வதை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய தமிழக அரசு எடுத்திருக்கும் முடிவு கண்டிக்கத்தக்கது என்று பாஜக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமீபத்திய சென்னை உயர் நீதிமன்றத்தின் பசு வதை தொடர்பான உத்தரவுக்கு முழுமையாக இணங்கி, திருப்திகரமான அறிக்கையை சமர்ப்பித்த பின்னரும், தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யும் முடிவு கண்டிக்கத்தக்கது.

மே 27, 2026 அன்று சென்னை உயர் நீதிமன்றம், இந்தியாவின் கிராமப்புற பொருளாதாரம், பால் உற்பத்தி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தின் மையமான பசுக்கள் மற்றும் கன்றுகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் இது வழங்கப்பட்ட 1976-ஆம் ஆண்டு நடைமுறையிலுள்ள அரசாணையையும், அரசியல் சட்டப் பிரிவு 48-ன் கீழான அரசியலமைப்பு சட்டத்தையும் முறையாக அமல்படுத்துமாறு உத்தரவிட்டது.

அங்கீகரிக்கப்பட்ட இறைச்சி நிலையங்களில் மட்டுமே ‘பசு வதை’ நடைபெற வேண்டும் என்றும், பசு வதை என்பது ஒரு அத்தியாவசியமான ‘மத வழக்கம்’ அல்ல என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்து, விலங்குகளின் நலனையும், சட்டத்தின் ஆட்சியையும் உறுதி செய்தது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு அதை முழுமையாக பின்பற்றுபடுவதாகவும், சட்டத்தை அமல்படுவதாகவும் தமிழக அரசு உறுதியளித்த பின்னர் அதே தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்து நீதித்துறையின் அதிகாரத்தை பலவீனப்படுத்துகிறது.

இந்த மேல்முறையீட்டை செய்ததன் மூலம் விலங்குகளின் பாதுகாப்பு, ஊரக வாழ்வாதாரங்கள், அரசியலமைப்பு சட்டம் ஆகியவற்றை விட அரசியல் ஆதாயத்திற்கே த வெ க அரசு முன்னுரிமை அளிக்கிறது என்பதை தெளிவாக்குகிறது என்பதோடு பாதிக்கப்படக்கூடிய விலங்குகளையும், பாரம்பரிய மதிப்புகளையும் பாதுகாக்கும் சட்டங்களை அமல்படுத்துவதில் மாநில அரசு தயக்கம் காட்டுகிறது என்பதை உணர்த்துகிறது.

எனவே, தமிழக அரசு இந்த மேல்முறையீட்டை திரும்பப் பெற்று, விவசாயிகள், பொருளாதாரம் மற்றும் அடுத்த தலைமுறையினரின் நலனுக்காக விலங்குப் பாதுகாப்புச் சட்டங்களை முறையாக அமல்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். குறுகிய கால அரசியல் ஆதாயங்களுக்காக, நீதியையும், மனிதாபிமானத்தையும் மறந்து விடுவது நல்லதல்ல என்பதை தமிழக முதலமைச்சர் ஜோஸப் விஜய் உணர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply