இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சி.மகேந்திரன் தவெகவில் இணைந்தார். சிவப்பு துண்டுடன் பயணிப்பேன் என அறிவித்துள்ளார். தமிழகத்தில் தவெக ஆட்சி அமைத்துள்ள நிலையில், பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் தங்கள் ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்து வருகின்றனர்.
இந்நிலையில், தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்துவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து அதன் மூத்த தலைவர்களில் ஒருவரான சி.மகேந்திரன் நேற்று தவெகவில் இணைந்தார்.
தவெக பொதுச் செயலாளரும், அமைச்சருமான என்.ஆனந்த் முன்னிலையில் இந்த இணைப்பு நிகழ்ந்தது. அப்போது சி.மகேந்திரன் பேசியதாவது: இந்த இயக்கத்தில் சிவப்பு துண்டு அணிந்து கொண்டே செயல்பட விரும்புகிறேன். எனது வாழ்நாள் முழுவதும் சிந்தித்து, நிறைவேற்ற முடியாத பிரச்சினையாக ஊழல் இருக்கிறது. அதை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கையை முதல்வர் விஜய் தந்திருக்கிறார். அதனால்தான் தவெகவில் இணைகிறேன்.
அரசின் பணம், திட்டங்கள் ஆகியவற்றைச் சாதாரண ஒடுக்கப்பட்ட ஒருவனுக்கு கொண்டு போய் கொடுப்பதற்கான ஒரு சாத்தியத்தை, இந்த தேர்தல் முதல்வர் விஜய் தலைமையில் தொடங்கி வைத்திருக்கிறது. இந்தத் தேர்தல் சாதியை ஒழித்திருக்கிறது. மதத்தை ஒழித்திருக்கிறது.
ஏழை பணக்காரன் என்ற வேறுபாடுகளை போக்கி, இந்திய ஜனநாயகத்தில் ஒரு சராசரி குடிமகனும் தேர்தலில் நின்று வெற்றி பெற முடியும் என்பதை முதல்வர் விஜய் உருவாக்கியிருக்கிறார். பெரியார், மகாத்மா, அம்பேத்கர் ஆகியோர் எடுத்த இயக்கமாக இது வளர வேண்டும்.
அதற்கான விதை தற்போது போடப்பட்டிருக்கிறது. பொதுவுடமை என்ற கொள்கை, அதன் வேர்கள் மேலும் பலப்படக்கூடிய விதத்தில் தவெகவில் செயல்படுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

