சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாநகராட்சி சார்பில், மத்திய அரசின் என்சிவிடி சான்றிதழுடன் கூடிய தொழிற்பயிற்சி வழங்கப்பட உள்ளது.
அதன்படி, கணினி இயக்குபவர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் (1 ஆண்டு), குழாய் பொருத்துநர் (1 ஆண்டு), பொருத்துநர் (2 ஆண்டு), கம்மியர்- மோட்டார் வாகனம் (2 ஆண்டு), மின் பணியாளர் (2 ஆண்டு), எலக்ட்ரானிக் மெக்கானிக் (2 ஆண்டு) ஆகிய பாடப் பிரிவுகளுக்கு மொத்தம் 184 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.
இதில், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கும், சென்னை மாநகராட்சி ஊழியர்களின் குழந்தைகளுக்கும் மாணவர்கள் சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கப்படும்.
பயிற்சியில் சேர வயது வரம்பு 14 முதல் 40 வயது ஆகும். பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது. படிக்கும் போது தகுதியுடைய மாணவர்களுக்கு ஒரு மாதம் அல்லது 3 மாதங்கள் நிறுவனங்களின் அனுமதியை பொறுத்து, ரூ.10,500 முதல் ரூ.15,000 வரை உதவித் தொகையுடன் கூடிய பயிற்சி அளிக்கப்படும்
மாதம்தோறும் ரூ.750 பயிற்சி உதவித் தொகை மற்றும் தமிழ் புதல்வன், புதுமைப் பெண் திட்டத்தின் கீழ்,மாணவ, மாணவியருக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும்.
விண்ணப்பப் படிவத்தை சென்னை மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையத்தில் இலவசமாக பெறலாம். அல்லது www.chennaicorporation.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, சென்னை மாநகராட்சி தொழிற் பயிற்சி நிலையம், லாயிட்ஸ் குடியிருப்பு, முத்தையா தெரு அருகில், ராயப்பேட்டை, சென்னை- 600014 என்ற முகவரியில் வரும் 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044 – 2847 3117 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

