கிளாம்பாக்கம் வழக்கு: ஆம்னி பேருந்துகளுக்கான தடையை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு

Priya
20 Views
2 Min Read

தனியார் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்க வேண்டும் என மாநில போக்குவரத்து ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து தனியார் ஆம்னி பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து தான் இயக்கப்பட வேண்டும் என்றும், சென்னை நகருக்குள் நுழையக்கூடாது என்றும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதி மாநில போக்குவரத்து துறை ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து தனியார் பேருந்து நிறுவனங்கள் சார்பிலும், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பிலும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், போரூர், சூரப்பட்டு ஆகிய இடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்க ஆம்னி பேருந்துகளுக்கு அனுமதியளித்ததுடன், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்துக்குள் சென்று பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும் எனவும் இடைக்கால உத்தரவை பிறப்பித்திருந்தது.

இந்த வழக்கின் இறுதி விசாரணையை மேற்கொண்ட நீதிபதி வி.லட்சுமி நாராயணன், தமிழ்நாடு மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி, பேருந்து முனையம் அமைக்க மாநில போக்குவரத்து ஆணையத்தின் ஒப்புதல் கோரி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் விண்ணப்பிக்க முடியாது; சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு தான் விண்ணப்பிக்க முடியும் என்பதால், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்துக்கு ஒப்புதல் கோரி காட்டாங்குளத்தூர் பஞ்சாயத்து யூனியன், மாநில போக்குவரத்து ஆணையத்துக்கு விண்ணப்பிக்கலாம் என உத்தரவிட்டுள்ளார்.

மேலும், குறிப்பிட்ட வழித்தடத்தில் பேருந்து இயக்க உரிமம் வழங்கிய நிலையில், அதை தடுக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதி, தனியார் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்க வேண்டும் என மாநில போக்குவரத்து ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

கடந்த ஜனவரி மாதம் போக்குவரத்து துறை அதிகாரிகள், ஆம்னி பஸ் உரிமையாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில், போரூர் சுங்கச்சாவடி அல்லது சூரப்பேடு ஆகிய இடங்களில் பயணிகளை ஏற்றி இறக்குவதைப் போல, மாதவரம் ரவுண்டானா அருகில் உள்ள இடத்தையும் பயன்படுத்துவது என எடுக்கப்பட்ட முடிவை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply