தாயுமானவர் திட்டத்தில் ஜுன் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் முதியோர் மாற்று திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருள்கள் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 2 கோடியே 28 லட்சத்து 12,942 ரேஷன் கார்டுகளுக்கு 34 ஆயிரத்து 916 நியாய விலை கடைகள் மூலம் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் விலையில்லா அரிசி, மானிய விலையில் பருப்பு, கோதுமை, சக்கரை, பாமாயில் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளால் ரேஷன் கடைகளில் நீண்ட நேரம் நின்று வாங்க முடியாமல் தவித்து வந்தனர். மேலும், உடல் நிலை பாதிப்பால் வீட்டில் இருந்து வெளியே நடக்க முடியாத காரணத்தால் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் கடந்த திமுக ஆட்சி காலத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக தேர்தல் பணிகள் நடைபெற்றதால் வீட்டிற்கு சென்று உணவுப்பொருட்கள் வழங்கும் பணி சற்று பாதிக்கப்பட்டது. தற்போது புதிய அரசு பதவியேற்ற நிலையில் முதியோர் மற்றும் மாற்று திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் தாயுமானவர் திட்டம் நீட்டிக்கப்படுமா.? அல்லது நிறுத்தப்படுமா.? என்ற கேள்வி எழுந்திருந்தது. இந்த நிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்தும் வகையில் நாளை மற்றும் நாளை மறு தினம் வீடுகளுக்கே நேரில் சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் சென்னை மண்டலம் பாபு வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுதிறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஜுன் மாதத்தின் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் சென்னையில் அண்ணாநகர், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர்,
தேனாம்பேட்டை, அடையாறு, திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், கோடம்பாக்கம், வளசரவாக்கம், பல்லாவரம், குரேம்பேட்டை மற்றும் தாம்பரம் ஆகிய 18 மண்டலங்களில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டுவரும் 990 நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்கள் அத்தியாவசியப் பொருட்களை வீடு தேடி விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் முதியோர் மற்றும் மாற்றுதிறனாளிகள் இத்திட்டத்தை தவறாமல் பயன்படுத்திகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

