தமிழ் சினிமாவில் சமீப காலமாக கதையை விட ஹீரோக்களை மையமாக வைத்து படங்கள் அதிகமாக உருவாகி வரும் நிலையில், மீண்டும் பரபரப்பான கதையையும் அதிரடியான திரைக்கதையையும் முன்னிலைப்படுத்தும் முயற்சியாக வந்திருக்கும் படம் தான் ‘பிளாஸ்ட்’. மலையாளத்தில் வெளியான ‘த்ரிஷ்யம்’ படத்தின் மையக் கருவை ஆக்ஷன் வடிவில் மாற்றி, குடும்ப சென்டிமென்ட் மற்றும் சமூக கருத்துகளுடன் இணைத்து விறுவிறுப்பாக சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் சுபாஷ் கே. ராஜ்.
கராத்தே மாஸ்டராக இருக்கும் அர்ஜுன், தனது மகள் ப்ரீத்தி முகுந்தனை சிறுவயதிலிருந்தே தைரியமாக வளர்க்கிறார். “யாருக்காவது அநியாயம் நடந்தால் தட்டிக் கேட்க வேண்டும்” என்ற எண்ணத்துடன் கராத்தே கற்றுக்கொடுத்து வளர்க்கும் அவர், மகளையும் தன்னம்பிக்கையுடன் உருவாக்குகிறார். அர்ஜுனின் மனைவி அபிராமியும் கராத்தே தெரிந்தவர் தான். ஆனால், குடும்பம் எப்போதும் பிரச்சனைகளில் சிக்கிக் கொள்வது அவருக்கு பிடிக்காது.
இதற்கிடையில், ஒரு மலைப்பகுதியில் இருக்கும் ஆயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள கனிம வளத்தை கைப்பற்ற முயலும் கார்ப்பரேட் வில்லன் ஜான் கொக்கேன், அதற்காக அரசியல்வாதிகளுடன் சேர்ந்து பெரிய திட்டம் தீட்டுகிறார். அந்த பண பரிமாற்றத்தில் ஈடுபடும் அர்ஜுன் சிதம்பரம் ஒரு விபத்தில் சிக்கி போலீசிடம் மாட்டிக்கொள்கிறார். அங்கிருந்து தப்பிக்கும் போது நடக்கும் ஒரு சிறிய சம்பவமே அர்ஜுன் குடும்பத்தை பெரிய பிரச்சனையில் இழுக்கிறது. அதன் பிறகு, வில்லன்களுக்கும் அர்ஜுன் குடும்பத்தினருக்கும் நடக்கும் மோதல்களே படத்தின் முக்கிய கதை.
படத்தின் மிகப்பெரிய பலம் அதன் வேகமான திரைக்கதை மற்றும் சண்டைக் காட்சிகள். ஒரு இடத்திலும் சலிப்பு வராத அளவுக்கு காட்சிகளை பரபரப்பாக நகர்த்தியிருக்கிறார் இயக்குநர். அதே நேரத்தில், “மற்றவர்களுக்கு அநியாயம் நடந்தால் அதை கண்டுகொள்ளாமல் போகக் கூடாது” என்ற கருத்தையும் கதைக்குள் இயல்பாக சொல்லியிருக்கிறார்.
ஆக்ஷன் கிங் அர்ஜுன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரசிகர்கள் எதிர்பார்த்த அதிரடி வடிவில் திரும்பியிருக்கிறார். வயது அதிகமானாலும் அவரது ஸ்டைலும் சண்டைக் காட்சிகளும் இன்னும் அதே வேகத்தில் இருப்பது ரசிக்க வைக்கிறது. வசனங்களை விட அவரது கை, கால் அசைவுகளே அதிகமாக பேசுகின்றன.
ப்ரீத்தி முகுந்தன் இந்தப் படத்தின் பெரிய ஆச்சரியம். சாதாரண ஹீரோயின் போல் மட்டும் இல்லாமல், ஆக்ஷன் காட்சிகளிலும் தன்னம்பிக்கையுடன் நடித்திருக்கிறார். குறிப்பாக இடைவேளைக்கு முன் வரும் சண்டைக் காட்சி ரசிகர்களிடம் கைதட்டல் பெறுகிறது. தமிழ் சினிமாவிற்கு புதிய ஆக்ஷன் நாயகியாக இவர் உருவாகும் வாய்ப்பு அதிகம்.
அபிராமி ஆரம்பத்தில் சாதாரண அம்மா கதாபாத்திரமாக தோன்றினாலும், இடைவேளைக்கு பிறகு அவருக்கான திருப்பம் ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது. வில்லன்களாக வரும் ஜான் கொக்கேன், அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்டவர்களும் கதைக்கேற்ற நடிப்பை வழங்கியுள்ளனர்.
படத்தின் மற்றொரு பெரிய பலம் பீனிக்ஸ் பிரபுவின் சண்டைக் காட்சிகள். கராத்தே மையமாக வைத்து வடிவமைக்கப்பட்ட சண்டைகள் புதுமையாக இருக்கின்றன. ரவி பஸ்ரூரின் பின்னணி இசை ஆக்ஷன் காட்சிகளுக்கு கூடுதல் வேகத்தை கொடுக்கிறது. அருண் ராதாகிருஷ்ணனின் ஒளிப்பதிவும், பிரதீப் ராகவின் எடிட்டிங்கும் படத்தின் பரபரப்பை அதிகரிக்க உதவியிருக்கின்றன.
சில லாஜிக் மீறல்கள் மற்றும் நீளமான காட்சிகள் இருந்தாலும், குடும்ப சென்டிமென்ட், ஆக்ஷன் மற்றும் பரபரப்பை இணைத்த ஒரு சுவாரஸ்யமான கமர்ஷியல் திரைப்படமாக ‘பிளாஸ்ட்’ அமைந்திருக்கிறது.

