தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சிகள் காரணமாக, இன்று நீலகிரி, கோவை உட்பட 11 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடக்கு தமிழகம், தென்கிழக்கு அரபிக்கடல், மத்திய கிழக்கு- தென்கிழக்கு வங்கக்கடல் ஆகிய பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சிகள் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை வாய்ப்புள்ளது என்றும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
நாளை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும், மறுபுறம், வட உள் தமிழக பகுதிகளில் நாளை வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என்பதால் கடுமையான வெப்பம் சார்ந்த அசௌகரியம் நிலவக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

