மேகேதாட்டு அணை விவகாரம்: சட்டப் போராட்டத்தை தீவிரப்படுத்த முதல்வர் விஜய் உத்தரவு

Priya
3 Views
2 Min Read

காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்ட பூமி பூஜை நடத்த கர்நாடக அரசு உத்தேசித்துள்ள நிலையில், ‘தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டிடவும், விவசாயிகளின் நலனைக் காத்திடவும், தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்’ என்று அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது குறித்து அரசு செய்திக் குறிப்பு: தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் விஜய் தலைமையில் காவிரி நதிநீர் வல்லுநர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் மிக முக்கியமான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிராக அமையக் கூடிய மேகேதாட்டு அணைத் திட்டத்துக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு இதுவரை மேற்கொண்ட சட்டப் போராட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அதில், கடந்த 30.11.2018 மற்றும் 07.06.2022 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தது.

கடந்த 13.11.2025 அன்று இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மேகேதாட்டு அணை திட்டத்துக்கு எவ்வித அனுமதியையும் வழங்கவில்லை என்பதையும், இது தொடக்க நிலையிலேயே இருப்பதாகவும், இத்திட்டம் முந்தைய தீர்ப்புக்கு உட்பட்டதா என்பதை மத்திய நீர்வளக் குழுமமே தீர்மானிக்க முடியும் என்று கூறி வழக்கை முடித்து வைத்திருந்தது எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், உச்ச நீதிமன்றத்தில் 13.11.2025 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பினை எதிர்த்து, தமிழ்நாடு அரசால் சீராய்வு மனு 11.12.2025 தேதியில் தாக்கல் செய்யப்பட்டது. அச்சீராய்வு மனுவானது முந்தைய ஆட்சிக் காலத்தில் உச்ச நீதிமன்றத்தில் உள்விசாரணை நடைபெற்று தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு தற்சமயம் உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

மேற்கண்ட தீர்ப்பு விவரங்களைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டிடவும், விவசாயிகளின் நலனைக் காத்திடவும், தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு முதல்வர் விஜய் பிறப்பித்துள்ளார்.

இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த், பொதுப் பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எரிசக்தி வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply