பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது ;
தமிழ்நாட்டில் 2025-26ஆம் ஆண்டில் 7.82 லட்சம் மகப்பேறுகள் நிகழ்ந்திருப்பதாகவும், அவற்றில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தாய்மார்கள் மிகவும் நெருக்கடியான காலத்தில் 108 அவசர ஊர்தி மூலம் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு குழந்தைப்பேறு அடைந்திருக்கிறார்கள் என்றும் அவசர ஊர்திகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்கும் EMRI Green Health Services நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ஓராண்டில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட கருவுற்ற பெண்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் உயிர்களைக் காப்பாற்றுவதில் 108 அவசர ஊர்தி ஆற்றிய பங்லை நினைத்து மகிழ்ச்சியும், பெருமையும் கொள்கிறேன்.
கடந்த ஆண்டில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தாய்மார்கள் மருத்துவமனைகளுக்கு 108 அவசர ஊர்தி மூலம் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்களில் 1500-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனைகளுக்கு செல்லும் வழியில் அவசர ஊர்தியிலேயே மகப்பேறு நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024-25 ஆம் ஆண்டில் இதேபோல் 1888 குழந்தைகள் அவசர ஊர்திகளில் பிறந்திருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் 500 குழந்தைகளில் ஒன்று அவசர ஊர்தியில் பிறக்கின்றன என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் அவசர ஊர்தி என்பது நகர்ப்புறங்களில் பணக்காரர்களுக்கு மட்டுமான சேவையாகவே இருந்தது.
ஏழைகள், அதிலும் கிராமப்புற ஏழைகள் இந்த சேவையை பயன்படுத்துவது பற்றி நினைத்துக் கூட பார்க்க முடியாது. அந்த நிலையை மாற்றியது நான் தான் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மத்திய சுகாதார அமைச்சராக 2004-ம் ஆண்டு பொறுப்பேற்ற நான், 2005-ம் ஆண்டில் தேசிய ஊரக சுகாதார இயக்கத்தைத் தொடங்கினேன். அதன் ஒரு கட்டமாகத் தான் 108 அவசர ஊர்தி சேவை தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் 2004-ஆம் ஆண்டில் 111 ஆக இருந்த தாய்மார்கள் இறப்பு விகிதம் இப்போது 35 ஆகவும், 2004-ஆம் ஆண்டில் 35 ஆக இருந்த குழந்தைகள் இறப்பு விகிதம் இப்போது 8.20 ஆகவும் குறைந்திருப்பதற்கு 108 அவசர ஊர்தி சேவை ஆற்றிய பங்கு அளப்பறியது.
ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்பது அதிகாரத்தை சுவைப்பதற்காக அல்ல; அதிகாரத்திலிருந்து நாம் விலகினாலும் நமது திட்டங்கள் நம் பெயரை காலம் முழுவதும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் என்பதில் தளராத நம்பிக்கை எனக்கு உண்டு. அந்த வகையில் 108 அவசர ஊர்தி சேவை, பொது இடங்களில் புகைப்பிடிக்கத் தடை, திரைப்படங்களில் புகைக்கும் காட்சிகளின் போது எச்சரிக்கை வாசகம், புகையிலைப் பொருள்களின் உறைகள் மீது எச்சரிக்கைப் படம், குட்கா உள்ளிட்ட போதைப் பாக்குகளுக்குத் தடை என நான் கொண்டு வந்த திட்டங்கள் வரலாறு உள்ள வரை எனது பணிகளுக்கு சான்றாக இருக்கும் என்பதை நினைத்து பெருமை கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் தற்போது அடிப்படை வசதி கொண்ட அவசரகால ஊர்திகள் -977, மேம்படுத்தப்பட்ட அவசரகால ஊர்திகள்- 307, பச்சிளங்குழந்தைகளுக்கான ஊர்திகள்- 65, பிற சேவைகளுக்கானவை – 4 என மொத்தம் அவசரகால ஊர்திகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த எண்ணிக்கை 2500 ஆக உயர்த்தப்பட்டால் தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த சேவை இன்னும் சிறப்பாக கிடைக்கும். எனவே தமிழ்நாட்டில் இயக்கப்படும் 108 அவசர ஊர்திகளின் எண்ணிக்கையை 2500 ஆக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

