கேரள மாநிலம் திருச்சூரில் அதிகாலையில் 3 ஏடிஎம்களில் சுமார் 65 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது. கொள்ளையடித்த பணத்துடன் வட மாநில கொள்ளையர்கள் தமிழ்நாட்டில் ஊடுருவ உள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மாநில எல்லைப் பகுதிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். திருச்செங்கோடு டிஎஸ்பி இமயவர்மன் தலைமையில் வாகனத் தணிக்கை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அங்கே வந்த கண்டெய்னர் லாரி ஒன்று காவலர்கள் மீது மோதுவது போல சென்று தப்பிச் சென்றது. காவல்துறையினர் அந்த கண்டெய்னர் லாரியை பின்தொடர கண்டெய்னர் லாரியும் நிறுத்தாமல் வேகம் எடுத்துச் சென்றது. உடனடியாக சன்னியாசி பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அந்த வாகனம் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பச்சாபாளையம் என்னும் இடத்தில் இரண்டு கார்கள் நான்கு இருசக்கர வாகனங்கள் மீதும் மோதிய தகவலை அறிந்து குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தவமணி தலைமையிலான காவலர் குழுவும் அந்த வாகனத்தை பின்தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் காவல்துறையினர் கண்டெய்னர் லாரியின் முன்னே சென்று அதை நிறுத்தம் முற்பட்டனர். அப்போது லாரியில் இருந்தவர்கள் கற்களால் காவல்துறையினரை தாக்கத் தொடங்கியுள்ளனர். கடும் போராட்டத்திற்குப் பிறகு லாரி சுத்தி வளைக்கப்பட்டு லாரியில் இருந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் கண்டெய்னரை திறந்து ஆய்வு செய்தபோது காவல்துறையினருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கண்டெய்னரின் உள்ளே வெல்டிங் இயந்திரங்கள் சொகுசு கார் லட்சக்கணக்கில் பணம் உள்ளிட்டவத்தோடு மூன்று பேர் பதுங்கி இருந்துள்ளனர். காவல்துறையினரை கண்டவுடன் அவர்களை தாக்கி விட்டு மூன்று பேரும் தப்பி ஓட, காவல்துறையினர் சுட்டதில் ஜமாலுதீன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மீதமுள்ள இருவரில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய ஒருவரை காவல்துறையினர் தேடி வரும் நிலையில், முதற்கட்ட விசாரணையில் கிடைத்த தகவல்கள் அனைத்தும் பேரதிர்ச்சியை தரக்கூடியவை. கடந்த இருபதாம் தேதி கிருஷ்ணகிரியில் ஒரு ஏடிஎம்மில் கொள்ளையடித்த இந்த கும்பல் அங்கிருந்து கேரளா சென்று பல்வேறு ஏடிஎம்களில் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர். ஹரியானாவைச் சேர்ந்த இந்த கும்பல் ஆசர் அலி என்பவர் தலைமையில் கண்டெய்னரில் கார் சகிதம் தென் மாநிலங்களுக்கு வருவார்கள். கண்டெய்னரை சிசிடிவி பார்வை படாத ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு காரில் உலா வந்து ஏடிஎம் மையங்களை குறி வைப்பார்கள். பின்னர் அதிகாலை வேளையில் அதாவது மூன்று முதல் நான்கு மணிக்கு இடையே ஏடிஎம் இயந்திரங்களை வெல்டிங் மெஷின் கொண்டு உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் செல்வார்கள். பின்னர் பணத்தையும் காரையும் கருவிகளையும் கண்டெய்னரில் மறைத்து மற்ற பகுதிக்குச் செல்வார்கள். திட்டமிட்டபடி கொள்ளை சம்பவம் நிறைவேறியதும் மீண்டும் தங்களது சொந்த மாநிலமான ஹரியானா சென்று விடுவார்கள். துணிச்சலுடன் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு, அடுத்த சம்பவத்திற்கு தயாராகி விடுவார்கள். ஏற்கனவே தமிழ்நாடு கேரளா ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறுமுறை இது போன்ற சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. கடந்த ஆண்டு கூட பிப்ரவரி மாதம் திருவண்ணாமலையில் இதுபோன்று நான்கு atmகளில் ஒரே நாளில் கொள்ளை சம்பவம் அரங்கேறியது. சுமார் 73 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட அந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஹரியானாவை சேர்ந்த ஆசிப் ஜாவித் உள்ளிட்ட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து கண்டெய்னர் லாரி, கார், சுமார் 35 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டன. அதே போன்று மீண்டும் கண்டெய்னர் லாரி, கார், லட்சக்கணக்கில் பணம் என தமிழ்நாடு காவல்துறையினரிடம் மற்றொரு கும்பல் சிக்கி உள்ளது. தற்போது சிக்கி உள்ள கும்பலுக்கும் ஏற்கனவே சிக்கிய கும்பலுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்கிற கோணத்திலும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். பட்டப் பகலில் காவல்துறையினரால் சுத்தி வளைக்கப்பட்டு வட மாநில கொள்ளை கும்பல் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here