1948 ஆம் ஆண்டு ஈரோட்டில் பிறந்தார் EVKS இளங்கோவன். தந்தை பெரியாரின் சகோதரர் ஈ.வே கிருஷ்ணசாமியின் பேரனான இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் படித்த போதே காங்கிரஸ் கட்சியின் மாணவரணி செயலாளராக இருந்தார். இதனை அடுத்து கடந்த 1984ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். அதன் பின் 2004ம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதே சமயம் 2004–2009 காலகட்டத்தின் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மத்திய ஜவுளிதுறை இணை அமைச்சராகவும் பதவி வகித்தார். மேலும் 2000-2002, 2014-2016 ஆகிய ஆண்டுகளில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருமுறை பதவி வகித்தார்.
தனது மகன் திருமகன் ஈவேரா மறைவை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று 2023 ஆம் ஆண்டு மீண்டும் எம்எல்ஏ ஆனார் EVKS இளங்கோவன்.
கட்சி பணிகளிலும் தொகுதி பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்த இளங்கோவனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனை அடுத்து கடந்த நவம்பர் மாதம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மூச்சுத்திணறல் பாதிப்பால் அவதிப்பட்ட இளங்கோவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு காங்கிரஸ் உட்பட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
EVKS இளங்கோவனின் உடல், நாளை தமிழக காங்கிரஸ் தலைமையகமான சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. அதன் பின்னர் நாளை மாலை சென்னையில் அவரது உடலுக்கு இறுதி சடங்கு நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது