பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118- வது ஜெயந்தி மற்றும் குருபூஜையை ஒட்டி, துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி. பழனிசாமி , மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சிலை மற்றும் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
அந்த வரிசையில்,பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்த தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஒரே காரில் பயணம் செய்து பசும்பொன் வந்தனர்.
அதிமுக பல அணிகளாக பிரிந்து இருக்கும் சூழலில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன் இருவரும் தான் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர்.அதிமுகவில் ஏற்கனவே உட்கட்சி பிரச்சனைகள் நீடித்து வரும் நிலையில், இரு மூத்த தலைவர்களின் இந்த பயணம் அரசியல் வட்டாரத்தில் சுவாரசியத்தை கூட்டியுள்ளது.
மேலும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், செங்கோட்டையன் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் என மூவரும் இணைந்து பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
அதன் பின் ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன் மூவரும் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது பேசிய முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்,
” அதிமுகவில் பிரிந்திருக்கின்ற சக்திகளை ஒருங்கிணைக்க வேண்டும் நல்லெண்ணத்தோடு, நம்பிக்கையோடு இங்கு கூடி இருக்கிறோம். அனைவரும் ஒருங்கிணைந்து ஒரே குடையின் கீழ் நின்று மீண்டும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், அம்மா அவர்களின் ஆட்சியை நிறுவிட வேண்டும் என்ற சபதத்தை இன்று மேற்கொண்டுள்ளோம். பசும்பொன்னில் இருந்து எங்கள் கூட்டணி தொடரும் ” என தெரிவித்தார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்,
” துரோகத்தை விழ்த்துவதற்காகத்தான் அமமுக உருவாக்கப்பட்டது. அந்த துரோகத்தை வீழ்த்தும் வரை அமமுக ஓயாது. அதிமுக எப்போதும் எங்களுக்கு எதிரி கிடையாது. எடப்பாடி ஒருவர் மட்டுமே எங்களுக்கு எதிரி. எடப்பாடி என்ற துரோக மனிதர்தான் அமமுக வின் எதிரி” என்றார்.

