காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சமையல் எரிவாயு சிலிண்டர் (Cylinder) விநியோகத்தில் பெரும் முறைகேடுகள் நடப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. சர்வதேச அளவில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக எரிவாயு இறக்குமதியில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு சில ஏஜென்சிகள் கள்ளச்சந்தையில் சிலிண்டர்களை விற்பனை செய்து வருகின்றன.
வீட்டு சிலிண்டர் வணிக பயன்பாட்டிற்கு மாற்றம்
ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், இருங்காட்டுகோட்டை போன்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் உள்ளதால், அங்கு பணியாற்றும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய ஏராளமான உணவகங்கள் மற்றும் டீ கடைகள் இயங்கி வருகின்றன. தற்போது வணிக ரீதியிலான சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஏஜென்சி உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஒன்றிணைந்து வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர்களை (Cylinder) ஒரு சிலிண்டருக்கு ரூ.3,000 வரை பெற்றுக்கொண்டு உணவகங்களுக்குச் சட்டவிரோதமாக வழங்கி வருகின்றனர்.
வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ் அதிர்ச்சி
பொதுமக்கள் தங்களின் சிலிண்டர்களை முன்பதிவு செய்த சில நாட்களில், “சிலிண்டர் டெலிவரி செய்யப்பட்டுவிட்டது” என அவர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்தி (SMS) வருகிறது. ஆனால், உண்மையில் அவர்களுக்குச் சிலிண்டர் வழங்கப்படுவதில்லை. இது குறித்து வல்லம் கிராமத்தைச் சேர்ந்த சத்தார்கான் என்பவர் ஏஜென்சியில் முறையிட்டபோது, “மீண்டும் புக் செய்யுங்கள்” என அலட்சியமாகப் பதிலளித்துள்ளனர். ஒரு சிலிண்டர் பெற்று 28 நாட்கள் கழித்தே மீண்டும் புக் செய்ய முடியும் என்ற விதிமுறை இருப்பதால், பொதுமக்கள் அடுத்த ஒரு மாதத்திற்குச் சமைக்க முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் முற்றுகை மற்றும் கோரிக்கை
ஏஜென்சிகளின் இந்த ஒருதலைப்பட்சமான நடவடிக்கையால் ஆத்திரமடைந்த படப்பை, சுங்குவார்சத்திரம், மாம்பாக்கம், தண்டலம் உள்ளிட்ட பகுதி மக்கள், அந்தந்த பகுதிகளில் உள்ள சிலிண்டர் ஏஜென்சி அலுவலகங்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வடமாநிலத் தொழிலாளர்கள் எவ்வளவு பணம் கொடுத்தாவது சிலிண்டர் வாங்கத் தயாராக இருப்பதை ஏஜென்சி ஊழியர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் வீட்டு உபயோக Cylinder-களைக் கள்ளச்சந்தையில் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையெனில் தொடர் போராட்டங்களில் ஈடுபடப்போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

