தமிழர்களின் கலை, வீரம், நிர்வாகத் திறன் மற்றும் ஆன்மீகத்தின் உன்னதப் பண்புகளை உலகறியச் செய்த மாமன்னர் இராசராச சோழனின் 1040-ஆவது சதய விழா தஞ்சை மண்ணில் இன்று (நவம்பர் 1) கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவை முன்னிட்டு , தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளதுடன், மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாமன்னன் இராசராச சோழன் கட்டியெழுப்பிய உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயில், வண்ண விளக்குகளாலும் தோரணங்களாலும் ஜொலிக்கிறது.
இராசராச சோழனின் பிறந்தநாளான ஐப்பசி மாத சதய நட்சத்திர நாளில் கொண்டாடப்படும் இந்த விழா, தமிழர்களின் வரலாற்றைப் போற்றும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகக் கருதப்படுகிறது.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
“தமிழர்களின் கலைத்திறன், போர்த்திறன், கப்பற்கலை, பாசனமுறை என அனைத்தின் உச்சமாக ஆட்சிசெய்து மங்காப் புகழொளியைத் தமதாக்கிக் கொண்ட மாமன்னர் இராசராச சோழனின் 1040-ஆவது சதய விழா இன்று!
தஞ்சை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு, நேற்றுமுதல் பல்வேறு நிகழ்ச்சிகளுடன், தஞ்சை மாநகர் முழுவதும் வண்ண விளக்குகள் ஒளிர, சதய விழா கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழர்களின் பெருமையாக அவர் நமக்காக விட்டுச் சென்றுள்ள பங்களிப்புகளை நினைவுகூர்ந்து, பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் சொல்லி, மாமன்னர் இராசராச சோழன் புகழ் போற்றுவோம்!” என தெரிவித்துள்ளார்.

