சென்னை, ஜூலை 28: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், புதியதொரு மெகா திட்டமாக ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி சென்னையில் தொடங்கி வைக்கவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் மக்களைத் தேடி முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
மயிலாப்பூரில் உள்ள செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இத்திட்டத்துக்கான ஏற்பாடுகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு, மக்கள் நல்வாழ்வுத் துறையில் பல்வேறு புதிய மற்றும் சிறப்பு திட்டங்கள் தொடர்ச்சியாகச் செயல்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
குறிப்பாக, ‘மக்களைத் தேடி மருத்துவம்’, ‘இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48’, ‘வருமுன் காப்போம்’, ‘இதயம் காப்போம்’, ‘நடப்போம் நலம் பெறுவோம்’, ‘மக்களைத் தேடி மருத்துவ ஆய்வகத் திட்டம்’, ‘தொழிலாளர்களைத் தேடி மருத்துவத் திட்டம்’, ‘சிறுநீரகம் பாதுகாக்கும் சீர்மிகு திட்டம்’, ‘புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள்’ போன்ற பல்வேறு சிறப்புத் திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், முதலமைச்சரின் வழிகாட்டுதலோடு, ஆகஸ்ட் 2, 2025 அன்று ‘நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்’ செயல்பாட்டுக்கு வரவுள்ளது. பொதுமக்கள் தங்கள் உடல் நலனைப் பாதுகாக்கும் வகையில் மருத்துவமனைகளில் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளும் வழக்கம் உள்ளது. ஆனால், இந்தத் திட்டம் மக்களை மிகப்பெரிய அளவில் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
ஏற்கனவே, ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் தொற்றா நோய்களுக்கான மருந்துகள் வழங்கப்படுவது உலக அளவில் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் ‘United Nation Interagency Task Force Award 2024’ விருது இத்திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ‘இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48’ திட்டம் இந்தியாவிற்கே வழிகாட்டியாக மாறியுள்ளது. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தை முன்னோடியாகக் கொண்டு ஒன்றிய அரசும் இதைச் செயல்படுத்தி வருகிறது. இவ்வாறாக, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டும் திட்டங்களாகத் தமிழ்நாட்டின் மக்கள் நல்வாழ்வுத் துறை திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.
அந்த வரிசையில், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ எனும் திட்டம், மக்களைத் தேடி முழு உடல் பரிசோதனை திட்டமாகச் செயல்படுத்தப்பட உள்ளது. முழு உடல் பரிசோதனை என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமான ஒன்றாகும். தனியார் மருத்துவமனைகளில் இதற்கான செலவு சுமார் 15,000 ரூபாய் வரையும், அரசு மருத்துவமனைகளில் சுமார் 4,000 ரூபாய் வரையும் இருக்கும் நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த மகத்தான திட்டத்தை மக்களின் இருப்பிடத்திற்கே கொண்டு சென்று முழு உடல் பரிசோதனை செய்யும் வகையில் வடிவமைத்துள்ளார். இத்திட்டம் மக்களுக்குச் சிறந்த மருத்துவ சேவையை உறுதி செய்யும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.