“கீழடி பெருமையை வெளிப்படுத்தியதால் பழிவாங்கப்பட்டாரா அமர்நாத்?” – பணியிடமாற்றத்தால் கொந்தளித்த தமிழகம்!

கீழடி அகழாய்வின் சூத்திரதாரி அமர்நாத் ராமகிருஷ்ணாவின் பணியிடமாற்றம், தமிழகத்தில் பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது.

By
parvathi
Parvathi is a committed Tamil news journalist who focuses on delivering authentic and impactful stories. Her work spans across politics, cinema, society, and people-driven developments, offering...
958 Views
3 Min Read
Highlights
  • கீழடி அகழாய்வு இயக்குனர் அமர்நாத் ராமகிருஷ்ணா டெல்லியிலிருந்து நொய்டாவிற்கு பணியிடமாற்றம்.
  • கீழடி ஆய்வு அறிக்கை இந்திய தொல்லியல் துறையால் நிராகரிக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பியது.
  • எம்பி சு.வெங்கடேசன், அமைச்சர் தங்கம் தென்னரசு, கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் பணியிடமாற்றத்தை கண்டித்துள்ளனர்.
  • பணியிடமாற்றம், கீழடியின் உண்மையை மறைக்கும் ஒன்றிய அரசின் முயற்சி என பரவலாகக் கண்டிக்கப்படுகிறது.
  • தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கீழடி அகழாய்வில் முக்கிய பங்காற்றிய தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா டெல்லியில் இருந்து நொய்டாவிற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரது இந்த பணியிடமாற்றம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளதுடன், அரசியல் தலைவர்கள் மற்றும் தொல்லியல் ஆர்வலர்களிடையே கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. இது கீழடி ஆய்வுகளின் உண்மையை மறைக்கும் முயற்சி எனப் பரவலாகக் கண்டிக்கப்பட்டு வருகிறது.

கீழடி அகழாய்வு, தமிழர்களின் தொன்மையான நாகரிகத்தை வெளிக்கொணர்ந்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆய்வு. 2014 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையிலான குழு மேற்கொண்ட அகழாய்வுகளில்தான் வைகை நதி நாகரீகம் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது உறுதியானது. இந்த ஆய்வுகள் தமிழர்களின் தொடக்க கால நாகரிகம் குறித்த புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சின. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வை மேற்கொண்ட அமர்நாத்தின் அறிக்கை, இந்திய தொல்லியல் துறையால் நிராகரிக்கப்பட்டது. அறிவியல்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை எனக் கூறி நிராகரிக்கப்பட்ட இந்த விவகாரம், தமிழகத்தில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியது.

கடந்த வாரம் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கீழடி குறித்த தரவுகள் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்று தெரிவித்த கருத்து, தமிழக தொல்லியல் ஆர்வலர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கூடுதல் அறிவியல் சான்றுகள் தேவை என்ற அமைச்சரின் கூற்று, கீழடியின் தொன்மையை குறைத்து மதிப்பிடும் முயற்சி எனப் பார்க்கப்பட்டது. இந்த சூழலில்தான் அமர்நாத் ராமகிருஷ்ணனின் பணியிட மாற்றம் நிகழ்ந்துள்ளது.

திமுக எம்பி சு.வெங்கடேசன் இது குறித்துக் கருத்து தெரிவிக்கையில், “தமிழின் தொன்மையையும், கீழடியின் உண்மையையும் நிலைநிறுத்த தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கும் அமர்நாத் ராமகிருஷ்ணன் கடந்த 9 ஆண்டுகளாக ஒன்றிய அரசால் வேட்டையாடப்படுகிறார். மதுரை, கவுகாத்தி, கோவா, சென்னை, டெல்லி, இப்போது நொய்டா என ஒவ்வொரு இடமாற்றத்திற்கும் ஒரு பின்னணி இருக்கிறது. அந்தப் பின்னணி கீழடி உண்மையோடு தொடர்புடையது. ஒன்றிய அமைச்சர் கொடுத்த பேட்டியே அவர்கள் எவ்வளவு கோபத்தோடும் ஒவ்வாமையோடும் இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தியது. தென்னிந்திய வரலாற்றிற்காக ஒரு வரலாற்றாளர் உறுதியோடு இருந்தால் அவர் எப்படி வேட்டையாடப்படுவார் என்பதை ஒன்றிய அரசு அமர்நாத்தை சான்றாக வைத்து பகிரங்கமாக மிரட்டுகிறது,” என்று குற்றம் சாட்டினார்.

தமிழ்நாடு அமைச்சர் தங்கம் தென்னரசுவும் இந்த பணியிட மாற்றத்தைக் கண்டித்துள்ளார். “தமிழினத்தின் பெருமைக்கும், தொன்மைக்கும் பங்கம் விளைவிக்கும் எத்தனையோ தடைகளைக் கடந்து, அறிவியல் ஆதாரங்களுடன் நம் மரபையும் மொழியின் பெருமையையும் உலகறியச் செய்து வருகிறோம். ஆனால், சில மனங்கள் இன்னும் உண்மையை ஏற்க மறுக்கின்றன. இத்தகைய மறுப்புகளை எதிர்கொள்ள, அறிக்கைகள் மட்டும் போதாது; மாறாக, சில மனங்களை மாற்ற வேண்டிய கடமை நம்முன் உள்ளது!!” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், மதுரை விரகனூரில் தி.மு.க மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “கீழடியில் நகர நாகரீகத்தை ஆய்வு செய்து வெளிப்படுத்திய அமர்நாத் ராமகிருஷ்ணன் மீண்டும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கீழடி அகழ்வாராய்ச்சியின் அறிக்கையை வெளியிடாமல் தாமதப்படுத்தி மண்மூடிப் புதைக்க முயலும் ஒன்றிய ஆட்சிக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இந்த இடம் மாற்றம் நடந்திருப்பது, மறைமுக மிரட்டலே. தனது ஆய்வை முடிக்கும் முன்பே அவரை மாற்றியடித்தனர். உயர் நீதிமன்றம் வழிகாட்டிய பிறகுதான் அகழ்வாய்வு அறிக்கையை எழுத அவர் அனுமதிக்கப்பட்டார். இப்போது அதை பொதுவெளிக்கே வராமல் மறைக்க பார்க்கின்றனர். இதுதான் பாஜகவின் வன்மம். வரலாற்றை அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்யவோ, அறியவோ கூடாது என்ற செயல் திட்டத்தின் வெளிப்பாடு. இந்த அராஜக போக்கை அனுமதிக்க முடியாது. கீழடி உள்ளிட்ட வரலாற்று ஆராய்ச்சிகளை காக்க, அறிவியல் அறிஞர்களை பாதுகாக்க தமிழ்நாட்டு மக்கள் கிளர்ந்தெழ வேண்டும்” என்று கடுமையாகக் கூறியுள்ளார்.

அமர்நாத் ராமகிருஷ்ணனின் பணியிட மாற்றம், கீழடி ஆய்வுகளின் எதிர்காலம் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளதுடன், மத்திய அரசு தமிழகத்தின் வரலாற்று மற்றும் தொல்லியல் முக்கியத்துவத்தை மதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளை வலுப்படுத்தியுள்ளது.

Share This Article
Parvathi is a committed Tamil news journalist who focuses on delivering authentic and impactful stories. Her work spans across politics, cinema, society, and people-driven developments, offering readers both clarity and depth. With a strong belief in ethical journalism, Parvathi ensures every article connects with truth and relevance.
Leave a Comment

Leave a Reply