தின்பண்டங்கள், சோப்பு, சிப்ஸ் உள்ளிட்ட பல பொருட்களின் விலை உயரும் அபாயம்.! இந்தியாவிற்கு காத்திருக்கும் அடுத்த நெருக்கடி

Priya
1 View
2 Min Read

இந்தியாவில் சமையல் எண்ணெய் முதல் அழகு சாதனப் பொருட்கள் வரை நீக்கமற நிறைந்திருக்கும் பாமாயில் (Palm Oil) விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் சூழலில், தற்போது பாமாயில் இறக்குமதியிலும் பெரும் பின்னடைவு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. உலகிலேயே அதிக அளவில் பாமாயில் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா விளங்கும் நிலையில், இந்த நெருக்கடி சாமானிய மக்களின் பாக்கெட்டைப் பதம் பார்க்கக் காத்திருக்கிறது.

இந்தியா ஆண்டுதோறும் சுமார் 9.5 மில்லியன் டன் பாமாயிலை நுகர்கிறது. ஆனால், உள்நாட்டு உற்பத்தி வெறும் 4 லட்சம் டன்னுக்கும் குறைவாகவே உள்ளது. இதனால் நமது தேவையின் பெரும்பகுதியை இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளே பூர்த்தி செய்கின்றன. தற்போது இந்த இரு நாடுகளும் பாமயிலை ‘பயோ டீசலாக’ (Biodiesel) மாற்றி, பெட்ரோலிய டீசலுடன் கலந்து உள்நாட்டில் பயன்படுத்தத் திட்டமிட்டு வருகின்றன. இந்தோனேசியா 40% வரை பாமயிலைத் டீசலில் கலக்க முயல்வதால், ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடுகளை விதிக்கப் பரிசீலித்து வருகிறது.

இந்தியாவில் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெயில் 40% பாமாயில் என்பதால், அதன் விலை உயர்வு நேரடியாகச் சமையலறையைப் பாதிக்கும். இது தவிர, விலை குறைவாகவும் நீண்ட நாள் கெடாமலும் இருப்பதால் பிஸ்கட், சிப்ஸ், கேக், சமோசா போன்ற தின்பண்டங்கள் மற்றும் இன்ஸ்டன்ட் உணவுகளில் இது பிரதானமாகச் சேர்க்கப்படுகிறது. மேலும் சோப்பு, கிரீம், லோஷன் உள்ளிட்ட அழகு சாதனத் தயாரிப்புகளிலும் இதன் பயன்பாடு அதிகம்.

ஹோர்மோஸ் நீரிணைப் பகுதியில் நிலவும் போர் பதற்றம் காரணமாகக் கப்பல் போக்குவரத்துச் செலவு அதிகரித்துள்ளதும் இந்தச் சிக்கலைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஏற்றுமதி செய்யும் நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்தால், இந்தியாவில் சமையல் எண்ணெய் மற்றும் தின்பண்டங்களின் விலை 10 முதல் 20 சதவீதம் வரை உயரக்கூடும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இது ஏற்கனவே பணவீக்கத்தால் அவதிப்படும் மக்களுக்குக் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply