தண்டையார்பேட்டையில் மழைநீர் தேங்கும் கிணற்றில் இறங்கி உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.30 லட்சம் நிவாரணத்தை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவர் சிவா வழங்கினார்.
சென்னை தண்டையார்பேட்டை மண்டலம், கொடுங்கையூர் தென்றல் நகர் 3-வது தெருவில் உள்ள மழைநீர் தேங்கும் கிணற்றில் இறங்கி தொழிலாளர்கள் நவீன் குமார் மற்றும் அஸ்மத் பாஷா ஆகியோர் மோட்டார் பழுதுபார்க்கும் பணியை நேற்று முன்தினம் மேற்கொண்டனர்.
அப்போது இருவரும் எதிர்பாராதவிதமாக அதில் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்க தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டார்.
அந்த உத்தரவின்படி, உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.30 லட்சத்துக்கான இழப்பீட்டு காசோலைகளைத் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் வி.சிவா நேற்று நேரில் சென்று வழங்கினார்.
இந்நிகழ்வில் தண்டையார்பேட்டை மண்டல அலுவலர் திரு. ஏ. ராஜ்குமார் மற்றும் அரசு துறை சார்ந்த உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

