சிலந்தியாற்றில் தடுப்பணை கட்டுவது தொடர்பான பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரளா முதல்வர் பிணராயி விஜயனுக்கு எழுதியுள்ள கடிதம் தொடர்பான செய்தி குறிப்பில், “காவிரிப் படுகையில், அமராவதி (பம்பார்) துணைப்படுகையின் ஒரு பகுதியான சிலந்தியாற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதாக சமீபத்தில் சில ஊடகங்களில் வந்த செய்திகளின் காரணமாக, அமராவதி ஆற்றில் நீர்வரத்து வெகுவாகக் குறையும் என்று தமிழ்நாட்டு விவசாயிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் இப்பணியினை நிறுத்தி வைக்க வேண்டுமென்று வலியுறுத்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த தடுப்பணை தொடர்பான திட்ட விவரங்கள் ஏதும் தமிழ்நாடு அரசிடமோ அல்லது காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடமோ வழங்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டின் நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்கள் கேரள நீர்வளத் துறை அதிகாரிகளிடம் ஏற்கனவே கேட்டுள்ளவாறு. இத்திட்டம் குறித்த தற்போதைய நிலவரம் மற்றும் கேரளாவின் பவானி மற்றும் அமராவதி(பம்பார்) துணைப் படுகைகளுக்கான பெருந்திட்டம் (Master Plan) ஆகிய முழு விவரங்களை அளிக்க வேண்டும்.

இந்தப் பிரச்சினை குறித்து சட்டப்படி ஆய்வு செய்வதற்கு இவ்விவரங்கள் மிகவும் தேவை என்பதால், இந்த விவரங்களை தமிழ்நாட்டிற்கு உடனடியாக அளிக்கவும், தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கிடையேயான உண்மையான தோழமை உணர்வை நிலைநிறுத்தவும், இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வரை இந்தப் பணியைத் நிறுத்தி வைக்குமாறு கேரள அரசின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் வலியுறுத்தியுள்ளார்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here