SIR: ‘வருமுன்னர் காப்பதே சரியான செயல்’ – அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு வீரமணி வரவேற்பு!

சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் நடவடிக்கைக்கு எதிர்ப்பு; தி.மு.க.வின் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு திராவிடர் கழக தலைவர் வீரமணி வரவேற்பு.

Surya
By
Surya
Surya is a passionate Tamil news journalist dedicated to delivering timely, accurate, and reader-friendly stories. With a focus on politics, social issues, cinema, and people-centric developments,...
98 Views
4 Min Read
Highlights
  • வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) நவம்பர் 4 முதல் தமிழகத்தில் தொடங்குகிறது.
  • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நவம்பர் 2ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது.
  • திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, இந்தத் தடுப்பு நடவடிக்கையை வரவேற்று, ‘பீகார்தனம்’ தமிழ்நாட்டில் நடைபெறக் கூடாது என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை ( SIR ) நவம்பர் 4- ஆம் தேதி முதல் துவங்கும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நவம்பர் 2 ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெற இருக்கிறது. இதற்கு ஆதரவு அளிக்கும் விதமாக திராவிடர் கழக தலைவர் வீரமணி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் எக்ஸ் பதிவில்,

” வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற சாக்கில், தேர்தல் ஆணையம் ‘‘பீகார்தனத்தை’’ செய்துவிட முனையக் கூடாதபடி, தடுப்பு நடவடிக்கைகளில், முதல் நடவடிக்கையாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்ற முடிவு மிகவும் வரவேற்கத்தக்கதாகும்! எச்சரிக்கை மணியடிப்பது மிகமிகத் தேவை! ‘

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. அதிகமான வாக்காளர்களைக் கொண்டுள்ள மக்களாட்சி நடைபெறும் நாடு’ என்று மார்தட்டிக் கொள்ளும் நாடு என்றாலும், வாக்குச் சாவடியில் மிக மோசமான ஓர் அம்சமாக கள்ள ஓட்டுப் போடுதலும் உள்ளதால், அதைத் தடுக்கும் முறையாக – வாக்காளர்கள் வாக்களித்ததின் சாட்சியமாக ஒரு விரலில், அழிக்க முடியாத மையால் புள்ளி குத்தியே தேர்தல் நடக்கிறது! இது உலக அரங்கில் நமது நாட்டில் நாணயக்கேடு மலிவு என்பதற்குச் சட்டப்பூர்வ ஒப்புதல் வாக்குமூலம் ஆகும்.

இதற்கே நாம் வெட்கித் தலைகுனிய வேண்டும்! ‘‘அழியாத மையையே அழித்துவிட்டு, நான் 5 முறை வோட்டுப் போட்டேன் பார்த்தீர்களா?’’ என்று ‘‘பெருமை பேசும்’’ ஒழுக்க(?) நாடு இந்த ஞானபூமி! அது அண்மையில் குறைந்து வருகிறது என்பது ஆறுதலும் தருவதாகும். ஆனால், இப்போது அதைவிடக் கொடுமையாக, ‘‘ஓட்டுத் திருட்டு’’ என்ற சொல்லாக்கம் புதிதாக நம் நாட்டுத் தேர்தல் அகராதியில் இடம்பெற்று வருவது மிகவும் வெட்கக்கேடு!

தற்போது இந்திய நாட்டின் பெரிய மாநிலங்களில் ஒன்றான பீகாரில், நவம்பர் ஒன்றாம் தேதியும், 6 ஆம் தேதியும் இரண்டு கட்டமாகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று, நவம்பர் 12 ஆம் தேதி அதன் முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கின்றன! இதற்குமுன் அங்கே தேர்தல் ஆணையமே வாக்காளர் பட்டியலில் ‘Special Intensive Revision’ (SIR) என்ற ஒரு திட்டத்தைப் புகுத்தி, பீகாரில் 65 லட்சம் வாக்காளர்களைத் தானடித்த மூப்பாகவே நீக்கியது. இதுகுறித்து பீகாரில் ஓர் எதிர்ப்புப் புயல் எழுந்தது! அதற்குமுன் மகாராட்டிரா, கருநாடகா போன்ற மாநிலங்களில், தேர்தலின்போது வாக்குகள் திருடப்பட்டன என்ற குற்றச்சாட்டினை மிக அழுத்தமாக, பல ஆதாரங்களுடன் இந்திய காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், நாட்டின் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி அவர்கள், மேடை தோறும் சுட்டிக்காட்டி, மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

உச்சநீதிமன்றத்தில் இதுபற்றிய அவசர வழக்குகள் விசாரணைக்கு வந்து, தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நன்கு ‘குட்டுக்கள்’ வைத்து, குறிப்பிட்ட தேதிக்குள், காரண காரிய விளக்கம், செயல் திருத்தப்பாடு தேவை என்று ஆணையிட்டது! இதுவே, இந்தியத் தேர்தல் ஆணையத்திற்குப் பெருமை தருவதாகுமா? அந்த ஆணையம் – ‘சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்கவேண்டும்’ என்பதை நாகரிகத்துடன் சுட்டிக்காட்டியும், அது மக்களிடையே, குறிப்பாக எதிர்க்கட்சிகளிடையே அதன் நம்பகத்தன்மையைப் போதிய அளவில் மீட்டெடுக்கவில்லை.

இந்த நிலையில், 2026 இல் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் 12 மாநிலங்களில் வாக்காளர்ப் பட்டியலைத் தீவிர முறையில் மறுசீரமைக்கும் (SIR) நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் இறங்க இருப்பதனால், தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையில் உள்ள மதச்சார்பற்ற கூட்டணியினரும் – ஜனநாயகத்தின் மாண்புக்கு இழுக்கு வரக்கூடாது என்று கருதுவோரும் மிகவும் விழிப்போடு விரைந்த பல நடவடிக்கைகளில் ஈடுபட முனைந்திருப்பது மிகமிக முக்கியமானதொன்றாகும்.

‘வருமுன்னர் காப்பதே சரியான செயல்’ ஆகும். தக்க பாதுகாப்பு, தடுப்பு நடவடிக்கைகளில் அயராமல் ஜனநாயகம் காக்கும் பாதுகாப்புப் படையினராகத் தங்களை மாற்றி, ஓட்டுத் திருட்டு அல்லது வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற சாக்கில், தேர்தல் ஆணையம் ‘‘பீகார்தனத்தை’’ இங்கேயும் செய்துவிட முனையக் கூடாதபடி, தடுப்பு நடவடிக்கைகளில், களப் பயிற்சி வாக்குச் சாவடியில் களப் பயிற்சி அமைவதும், அதற்கு முன்னரே, பட்டியலிலிருந்து குறிப்பாக சிறுபான்மையோரை நீக்கி, பல ‘‘அரசியல் ரசவாதங்களில்’’, ‘‘சித்து விளையாட்டுகளில்’’ ஈடுபடாமல் தடுப்பதும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் – அவசர அவசியமாகும்.

அதற்கான முதல் நடவடிக்கையாக நம்முடைய முதலமைச்சர் தலைமையில் நேற்று (27.10.2025) அரசியல் தோழமைக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தின் முடிவில், வருகின்ற 2.11.2025 அன்று காலை சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்ற முடிவு எடுக்கப்பட்டு இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.

‘வாக்குத் திருட்டு’ என்ற புதிய முறையைச் சற்றும் தமிழ்நாட்டில் நடைபெற விடமாட்டோம் என்பதைக் கண்காணிக்கும் பல முக்கியத் தடுப்பு முறைகளை அக்கூட்டத்தில் விவாதித்து, சிறப்பான செயற்பாடுகளை வகுப்பது மிகவும் இன்றியமையாததாகும்! மக்களின் உரிமைகளைத் திருட்டுக் கொடுக்காமல், மக்கள் ஏமாந்துவிடாமல் எச்சரிக்கை மணியடிப்பது மிகமிகத் தேவை” என தெரிவித்துள்ளார்.

Share This Article
Surya is a passionate Tamil news journalist dedicated to delivering timely, accurate, and reader-friendly stories. With a focus on politics, social issues, cinema, and people-centric developments, she brings clarity and depth to every report. Her articles aim to inform, engage, and empower readers with trustworthy journalism.
Leave a Comment

Leave a Reply