“நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் பழங்கள், காய்கறிகள் மூலிகைச் செடிகள் வளர்ப்பை ஊக்குவிக்க ‘வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம் திட்டம்’ 10 கோடி ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படும்.” என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று வேளாண் பட்ஜெட்டை துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார்.
வேளாண் பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள்:
• பனை மரங்களின் பாதுகாப்பை உறுதி செய்து பனைப் பொருட்கள் உற்பத்தியை ஊக்குவிக்க பனை பாதுகாப்பு இயக்கம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இதற்காக 2 கோடியே 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.
• நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் பழங்கள், காய்கறிகள் மூலிகைச் செடிகள் வளர்ப்பை ஊக்குவிக்க ‘வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம் திட்டம்’ 10 கோடி ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படும்.
• ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ், முள்ளங்கி, பச்சை பட்டாணி, கொண்டைக்கடலை, ஆளி விதை, வெங்காயம், பச்சைப்பயிறு, கொள்ளு, எள், கோதுமை ஆகியவை தளிர்க்கீரைகள் என்று அழைக்கப்படும். இந்த தளிர்க்கீரைகள் தொகுப்பு முக்கிய நகர் பகுதிகளில் விநியோகம் செய்ய ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.
• தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தியை ஊக்குவிக்க 41 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
• சாமந்தி சாகுபடி செய்யும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பருவ நிலை மாறுபடும் காலங்களில் கூடுதல் ஒளியை ஏற்படுத்தி செடியின் வளர்ச்சியை தூண்ட எல்இடி விளக்குகள் அமைக்கும் திட்டம் 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
• 15 கோடி 55 லட்சம் ரூபாய் ஒன்றிய, மாநில நிதியில் 3 லட்சம் சதுர கி.மீ பரப்பில் பசுமை குடில் மற்றும் நிழல்வலைக் குடில்கள் அமைக்கப்படும்.
• 2500 ஏக்கரில் சாகுபடி செய்யப்படும் பழ பயிர்களுக்கு இரண்டு கோடியே 50 லட்சம் ரூபாய் நிதியில் பழ உறைகள், வாழைக்கு உறையும் வழங்கப்படும்.
• தோட்டக்கலை பயிர்களுக்கு நிரந்தர பந்தல் அமைப்பை ஊக்குவிக்க 11 கோடி 73 லட்சம் நிதியில் நிரந்தர பந்தல் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
• வாழைக்கு முட்டுக் கொடுக்க நிதி உதவி வேண்டி விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர். இதற்காக 6 கோடியே 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் வாழைக்கு முட்டுக் கொடுக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
• தென்னைக்கான சிறப்புத் திட்டம் 16 கோடி ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படும்
• தென்னை மரங்களுக்கு தென்னை டானிக் வழங்குவதற்காக 6 கோடியே 20 லட்சம் ரூபாய் மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
• தென்னையை தாக்கும் வேர்வாடல் நோய் மற்றும் சுருள் வெள்ளை ஈ ஆகியவற்றை கட்டுப்படுத்த நுண்ணுயிர் கலவை 75 சதவீதம் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். இத்திட்டத்திற்காக ஒரு கோடி ரூபாய் மாநில நிதி ஒதுக்கீடு செய்யும்.
• தரமான தென்னங்கன்றுகள் விவசாயிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்ய கரூர் முதலைப்பட்டி அரசு தோட்டக்கலைப் பண்ணையில் 15 ஏக்கர் பரப்பளவில் புதிய தென்னை நாற்றுப்பண்ணை 48 லட்சம் மதிப்பில் உருவாக்கப்படும்.
• தமிழ்நாடு தென்னை பதப்படுத்தும் கழகம் 22 கோடியே 30 லட்சம் ரூபாய் மாநில நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படும்.
• கொப்பரை விலை வீழ்ச்சியை தடுத்து விலையினை நிலைப்படுத்த குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொப்பரை கொள்முதல் செய்வதற்கான விலை ஆதரவு திட்டம் உரிய நேரத்தில் அறிவிக்கை செய்யப்பட்டு செயல்படுத்தப்படும்

