“ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசிகளாக காவல் துறை அதிகாரிகள் செயல்பட கூடாது” – கி.வீரமணி

Priya
595 Views
2 Min Read

“தமிழகத்தில் காவல் துறை அதிகாரிகள், ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசிகளாக செயல்படக் கூடாது” என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.

திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எத்தகைய எதிர்ப்புகள் வந்தாலும் கொள்கை உறுதியோடு, தெளிவோடு நிற்பதே தந்தை பெரியாரின் வழிமுறையாகும். இன்றைய அரசியல் சூழலில் பதவிக்காக கட்சி மாறுபவர்கள் பெருகிவரும் வேளையில், கொள்கைப் பிடிப்பு இல்லாத பொது வாழ்க்கைக்கு எதிராக இளைஞர்களிடம் பெரியாரின கொள்கைகளைக் கொண்டு சேர்க்க வேண்டியது அவசியமாகிறது.

சாதி வெறி, சாதி அடையாளம் மற்றும் சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதே இந்தப் பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாகும்.

இந்தப் பிரச்சார கூட்டத்திற்கும், இருசக்கர வாகன பேரணிக்கும் காவல் துறை முதலில் அனுமதி மறுத்தது. முந்தைய ஆட்சிகளிலும், தற்போதைய ஆட்சியின் தொடக்கத்திலும் இதுபோன்ற பிரச்சாரங்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது திடீரென மறுக்கப்பட்டதை அடுத்து திராவிடர் கழகம் உயர் நீதிமன்றத்தை நாடியது.

கருத்து சுதந்திரத்தை பறிக்க உரிமை அரசுக்கு இல்லை என்றும், குறிப்பிட்ட அமைப்புகளுக்கு மட்டும் இரட்டை அளவுகோல் கடைப்பிடிக்கக் கூடாது என்றும் நீதிமன்றம், காவல் துறையை எச்சரித்ததை தொடர்ந்து, அனுமதி பெறுவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நீட் தேர்வை முதன்முதலில் எதிர்த்து போராடியது தமிழ்நாடுதான். தற்போது நீட் தேர்வின் தோல்விகளும், அதில் நடந்த ஊழல்களும் இந்தியா முழுவதும் வெளிச்சத்துக்கு வந்து, டெல்லி வரை எதிரொலித்து வருகின்றன. இருப்பினும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக அரசு பிடிவாதமாக இந்தத் தேர்வை திணிக்கிறது. முறைகேடுகளுக்கு தீர்வு காணாமல் அமைச்சரை மட்டும் மாற்றுவது போதாது.

தமிழகத்தில் நடைபெறும் ஆணவ கொலைகள் மற்றும் கூலிப்படை கொலைகள் போன்ற சட்டம் – ஒழுங்குப் பிரச்சினைகள் கவலையளிப்பதாக உள்ளது. பிரச்சினைகளைச் சரிசெய்ய 5 ஆண்டுகள் அவகாசம் தேவை என்ற ஆளுங்கட்சியின் தற்காப்பு வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டம் – ஒழுங்கு பராமரிப்பு என்பது தீயணைப்புத் துறை அல்லது அவசர சிகிச்சைப் பிரிவு போன்றது. அதற்கு அவகாசம் கேட்க முடியாது, உடனடியாக செயல்பட வேண்டும். காவல் துறை அதிகாரிகள், ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசிகளாக செயல்படக் கூடாது. ஜனநாயகத்தில்

கேள்வி கேட்கும் உரிமை எதிர்க்கட்சிகளுக்கும் மக்களுக்கும் உண்டு. மாற்றுக் கருத்துகளை தடுப்பது பாசிசமாகும். மத்தியில் மக்கள் விரோத திட்டங்கள் கொண்டு வரப்படும்போது, அதை எதிர்க்கும் உரிமை அனைவருக்கும் உள்ளது. அரசியல் சாசனத்தின்படி பதவியேற்ற அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அதற்கேற்ப செயல்பட வேண்டும்.

பொருளாதார அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு என்ற பெயரில் கொண்டு வரப்பட்டுள்ள கொள்கைகளை விளக்குவதற்கும், நீட் தேர்வின் பாதிப்புகளை பரப்புரை செய்வதற்கும் திராவிடர் கழகம் பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டுள்ளது” என்று கி.வீரமணி தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply