எம்எல்ஏ மீதான வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்: டிஜிபியை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் மனு

Priya
18 Views
2 Min Read

‘கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீதான வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும்’ என, வலியுறுத்தி தமிழக டிஜிபியை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து மனு அளித்துள்ளார்.

பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீதான வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக டிஜிபியை நேரில் சந்தித்து நேற்று மனு அளித்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் தொடர்ந்து ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இந்தச் சம்பவம் ஜூலை மாதமே நடந்துள்ளது.

முதல் 6 மாதம் புதிய ஆட்சிக்கு ‘ஹனிமூன் பீரியட்’ என்பார்கள். இந்த ஆட்சியில் உள்ள அனைவரும் அதை அப்படியே புரிந்துகொண்டனர் என்று நினைக்கிறேன். ஜூலை 31-ல் சம்பவம் நடந்துள்ளது.

அப்போதே தலைமைச் செயலாளரிடம் பாதிக்கப்பட்ட ஆட்சியரும் புகார் அளித்திருக்கிறார் கள். ஆனால், அவரோ வேறுமாவட்டத்துக்கு மாறுதல் வாங்கிச் செல்ல சொல்லியிருக்கிறார்.

இன்று நான் டிஜிபியிடம் கொடுத்த புகாரில், ‘ஆட்சியரிடம் தலைமைச் செயலாளர் சமரசம் பேசியிருக்கிறார். அதனால் அவரையும் குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும்’ என்று கோரியுள்ளேன்.

ஆட்சியர் புகார் குறித்து முதல்வரிடம் தலைமைச் செயலர் சொன்னாரா இல்லையா? அப்படிச் சொல்லியிருந்தால் முதல்வர் ஏன் 116 நாட்கள் அமைதியாக இருக்கிறார்?. இந்த ஆட்சியில் இன்னொன்றும் நடந்துள்ளது.

பேரவை துணைத் தலைவர், மனு கொடுக்க வந்தவரை அடித்தார். அந்தச் சம்பவத்தின் மீது 16 நாட்கள் ஆகியும் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த அரசின் மீது நம்பிக்கையில்லை. அதனால், அருள் விக்னேஷ் எம்எல்ஏ மீதான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

உதயநிதி தவறாக பேசுவதாக அரசு தரப்பில் முறையீடு

உயர் நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பாக நேற்று ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.ஜான் சத்யன், ‘‘கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ விவகாரம் தொடர்பாக டிஜிபி அலுவலகத்துக்கு புகார் அளிக்கச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், உண்மைக்குப் புறம்பான தகவல்களை பொதுவெளியில் தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, தவறான கருத்துகளை அவர் தெரிவித்து வருகிறார். அவரது பேட்டி சமூக வலைதளத்தில் பரவி வருகிறது’ என குற்றம்சாட்டினார்.

அதற்கு நீதிபதி, ‘‘அரசியல்ரீதியாக நடைபெறும் நிகழ்வுகளுக்கு நான் என்ன செய்ய முடியும்? கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக நேற்று விரிவாக உத்தரவு பிறப்பித்துள்ளேன்.

அதிகாரம் உங்களிடம் உள்ளது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவு மீறப்பட்டு இருந்தால் சைபர் க்ரைம் போலீஸார் மூலமாக நீங்களே அதுபோன்ற பதிவுகளை நீக்கலாம். சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கலாம்’’ என அறிவுறுத்தினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply