“மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழி” – கூலாக ரீல்ஸ் எடுக்கும் சிங்கப்பெண் படை – உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு

Priya
14 Views
2 Min Read

சட்டமன்றத்தில் இன்று பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்த செய்திகளைப் பார்த்தால் மிகவும் கொடுமையாக உள்ளது என்று கருத்து தெரிவித்து உள்ளார். தவெக ஆட்சி பொறுப்பேற்ற இந்த ஒரு மாதத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட பாலியல் குற்றங்கள் நடந்துள்ளன.

அதில் 100-க்கும் மேற்பட்ட குற்றங்கள் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள். ஜனநாயக நடைமுறைக்கு எதிராகக் குழந்தைகளை தூண்டிவிட்டு வீட்டிலிருக்கும் பெரியவர்கள் தனக்கும், தனது கட்சிக்கும் ஓட்டு போட சொல்லுமாறு வலியுறுத்தி அவர்களை சுயலாபத்திற்காக பயன்படுத்தி கொண்டார் இன்று முதலமைச்சராக இருப்பவர். இப்படி அதிகாரத்திற்கு வந்த அவரது ஆட்சியிலேயே குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை, பெரியவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்ற நிலைமையே உள்ளது என்று காட்டமாக விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், தவெக ஆட்சிக்கு வந்த ஒரு சில நாட்களிலேயே கோவையில் 10 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது. தமிழ்நாட்டையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி வழக்கில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு புதரில் வீசப்பட்டு உயிரிழந்தது. இந்த 2 சம்பவங்களிலும் மரணமடைந்த குழந்தைகளின் உடலைப் பெற்றோரிடம் முறையாகக் கொடுக்காமல் வேறு இடத்தில் காவல்துறையின் மூலமாகவே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதை எல்லாம் பார்க்கும் போது நாம் தமிழகத்தில் தான் இருக்கிறோமா அல்லது உ.பி, ம.பி போன்ற வட மாநிலங்களில் இருக்கிறோமா என்ற சந்தேகம் வருகிறது.

சிங்கப்பெண் படை திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்த அடுத்த நாளே காவல்துறையைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கு மூன்று பேர் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்கள். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மட்டும் கடந்த ஜூன் 12-ஆம் தேதி, 24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகின. “சிங்கப்பெண் படை குற்றவாளிகளைப் பிடிப்பார்கள்” என்று பார்த்தால், அவர்களும் கூலாக ரீல்ஸ் எடுத்து போஸ்ட் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.‘மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி’ என்று சொல்வதை போன்ற பாதையை அந்தச் சிங்கப்பெண் படை பின்பற்றுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது என்று சாடினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply