இந்திய தேர்தல் நடைமுறைக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் தோல்வி அடைந்தார். இந்த தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக அவர் குற்றம் சாட்டினார். குறிப்பாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினர், ஜனநாயக கட்சிக்கு ஆதரவாக வாக்களித்ததாகவும் அவர்களின் வாக்குரிமை பறிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
கடந்த 2024-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி வெற்று மீண்டும் அதிபராக பதவியேற்றார். அவரது அறிவுரைப்படி அமெரிக்க தேர்தல் நடைமுறைகளை ஒழுங்குபடுத்த, “சேவ் அமெரிக்கா ஆக்ட்” என்ற மசோதா வரையறுக்கப்பட்டு உள்ளது. கடந்த பிப்ரவரியில் “சேவ் அமெரிக்கா ஆக்ட்” மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தின் மக்கள் பிரதிநிதிகள் அவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் செனட் அவையில் மசோதா முடங்கி கிடக்கிறது. இந்த மசோதாவுக்கு பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
புதிய மசோதா விதிகள்
புதிய மசோதா விதிகளின்படி அமெரிக்க வாக்காளர்கள் அனைவருக்கும் புகைப்படத்துடன்கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். அமெரிக்க மக்கள் தேர்தலில் வாக்களிக்கச் செல்லும்போது குடியுரிமை சான்றை கண்டிப்பாக காண்பிக்க வேண்டும். வெளிநாட்டினரை அடையாளம் கண்டுபிடித்து அவர்கள் வாக்களிக்க தடை விதிக்க வேண்டும். இ-மெயில் வாக்களிப்பு நடைமுறைகளை கடுமையாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் மசோதாவில் இடம்பெற்று உள்ளன.
இந்த சூழலில் “சேவ் அமெரிக்கா ஆக்ட்” மசோதாவை செனட் அவையில் நிறைவேற்ற அதிபர் ட்ரம்ப் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: இந்த மாத தொடக்கத்தில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் எங்கள் நிர்வாகத்திடம் ஒரு கேள்வியை எழுப்பினார். புகைப்பட அடையாள அட்டை இல்லாமல் அமெரிக்காவில் எப்படி தேர்தல் நடத்தப்படுகிறது என்று அவர் கேள்வி கேட்டார்.
இந்தியாவில் கடைசியாக நடத்தப்பட்ட தேர்தலில் 64.60 கோடி பேர் வாக்குரிமை பெற்றிருந்தனர். இதில் ஒரு சதவீதத்துக்கும் குறைவான மக்களே மெயில் மூலம் வாக்களித்தனர். ஒவ்வொரு இந்தியரும் புகைப்படத்துடன்கூடிய வாக்காளர் அட்டையை வைத்துள்ளனர். இந்த நேரத்தில் “சேவ் அமெரிக்கா ஆக்ட்” மசோதாவை நாமும் உடனடியாக நிறைவேற்ற வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய தேர்தல் நடைமுறையை பாராட்டியுள்ள அதிபர் ட்ரம்ப், இதே பாணியில் அமெரிக்காவிலும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருக்கிறார்.

