தமிழகத்துக்கு நீட் விலக்கு கோரி வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் சட்ட மசோதா நிறைவேற்ற வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசு நீட் தேர்வை முற்றாக கைவிட வேண்டும், தமிழக அரசு நீட் விலக்கு சட்டத்தை இயற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விசிக சார்பில் நேற்று சென்னையில் ஆர்ப்பட்டம் நடைபெற்றது.
விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன், பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி, கட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ ஜோதி மற்றும் விசிகவினர் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது: டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. டெல்லியோடு இந்த போராட்டம் நிற்காமல் இந்தியா முழுவதும் ஆங்காங்கே மும்பையிலும் சென்னையிலும் கொல்கத்தாவிலும் ஹைதராபாதிலும் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் பங்கேற்கும் போராட்டமாகவே பரிணமித்தது.
இதனிடையே சிஜேபி கட்சியினர் முன்வைத்த கோரிக்கையை ஏற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். இது பாஜக ஆட்சியின் வீழ்ச்சியின் தொடக்கப்புள்ளி, யாராலும் அசைத்துக் கூட பார்க்க முடியாது என்று வழக்கம்போல செயல்பட்டு வந்த பாஜகவினர் அசைக்கப்பட்டு விட்டார்கள். அசைந்து கொடுத்து விட்டார்கள் இது ஒரு புதிய வரலாறு.
காங்கிரஸ் மூலமாகத்தான் பாஜகவுக்கு மக்கள் தண்டனை வழங்குவார்கள் என்று இல்லை சிஜேபி மூலமாக தண்டனை வழங்க முடியும் என காண்பித்துள்ளனர். அரசியல் கட்சியிலும், பொது வாழ்க்கையில் உள்ள ஒவ்வொருவருக்கும் இது ஒரு படிப்பினை.
தமிழகத்திலும் திமுகவை அதிமுகவும், அதிமுகவை திமுக தான் வீழ்த்த முடியும் என்ற நிலையை தமிழக வெற்றிக்கழகம் மாற்றியுள்ளது.
தொடக்கம் முதலே நம்முடைய கோரிக்கை நீட் கூடாது, தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் நீட் தேர்வு கூடாது என்பதுதான். மேலும் இந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு என்பது கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வருவது தான்.
தமிழக அரசு வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரி சட்ட மசோதா நிறைவேற்ற வேண்டும். மேலும் தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை. இவ்வாறு அவர் பேசினார்.

