“தமிழர்களின் மீதான அவதூறு கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை”- தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம்!.

Surya
By
Surya
Surya is a passionate Tamil news journalist dedicated to delivering timely, accurate, and reader-friendly stories. With a focus on politics, social issues, cinema, and people-centric developments,...
124 Views
1 Min Read

பீகாரில் முதற்கட்ட வாக்குப்பதிவு நெருங்குவதால் தேர்தல் பரப்புரை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் பீகார் தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் நரேந்திர மோடி, “தமிழ்நாட்டில் வேலை செய்யும் பீகார் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் “என்று பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, பிரதமர் மோடி சமீபத்தில் மேற்கொண்ட தேர்தல் பிரசாரங்களில் தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில்  வெளிப்படுத்திய கருத்துகள் மிகுந்த வருத்தத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளன  என தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் எக்ஸ் பதிவில்,

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், சமீபத்தில் மேற்கொண்ட தேர்தல் பிரசாரங்களில் தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் வெளிப்படுத்திய கருத்துகள் மிகுந்த வருத்தத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளன.

ஒரு மக்களாட்சியின் தலைவராக, அனைத்து மாநிலங்களையும், அனைத்து மக்களையும் சமமாகக் கையாளுவது பிரதமரின் அடிப்படை பொறுப்பாகும். ஆனால், தேர்தல் நன்மைக்காக ஒரு மாநில மக்களை பழித்துக் கூறுவது அரசியல் நாகரிகத்துக்கும், ஜனநாயகக் கொள்கைக்கும் எதிரானது.

தமிழர்கள், உழைப்பும் அறிவும் இணைந்த மக்களாக உலகம் முழுவதும் மரியாதை பெற்றவர்கள். அவர்களை குறைத்து பேசுவது, தமிழ் மக்களின் மனதை மட்டும் அல்லாது, இந்திய ஒற்றுமையையே பாதிக்கும் வகையில் உள்ளது.

தமிழ்நாடு எப்போதும் இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பைச் செய்துள்ளது. இந்நிலையிலேயே, தமிழர்களின் மீதான அவதூறு கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உடனடியாக தமது கருத்துகளை திரும்பப்பெற்று, தமிழர்களிடம் தனது பேச்சுக் குறித்து மன்னிப்பு கேட்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற பிரிவினை மற்றும் வெறுப்பை தூண்டும் பேச்சுக்களை தவிர்க்க வேண்டும்.

மாநிலங்களின் ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் பாதுகாப்பது ஒன்றிய அரசின் பொறுப்பு என்பதை நினைவில் வைத்துக் கொண்டு பிரதமர் செயல்பட வேண்டும்.

தமிழர்கள் மீது தாக்கம் ஏற்படுத்தும் எந்தவித செயலும், எந்தவித கருத்தும் தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்” என தெரிவித்துள்ளார்.

Share This Article
Surya is a passionate Tamil news journalist dedicated to delivering timely, accurate, and reader-friendly stories. With a focus on politics, social issues, cinema, and people-centric developments, she brings clarity and depth to every report. Her articles aim to inform, engage, and empower readers with trustworthy journalism.
Leave a Comment

Leave a Reply