தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Priya
31 Views
2 Min Read

தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டிவரும் நிலையில் நேற்று 15 இடங்களில் சதம் அடித்தது..
அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் அளவிற்கு வெயில் வாட்டியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கம், வேலூர், மதுரை மாநகரம் ஆகிய இடங்களில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயிலும், திருப்பத்தூர், திருத்தணி ஆகிய இடங்களில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும் பதிவானது.
பாளையங்கோட்டை, பரங்கிப்பேட்டை, திருச்சி ஆகிய இடங்களில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும், கடலூர், ஈரோடு, கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம், நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயிலும் வாட்டியது. அதேபோல, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களிலும் வெயில் சதமடித்ததாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையே, தேனி, திண்டுக்கல், நீலகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு வாரத்திற்கு மழை தொடரும் என வானிலை மையம் கணித்துள்ளது. குறிப்பாக, தேனி, திண்டுக்கல், நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழை பெய்யக் கூடும் எனத் தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், திண்டுக்கல், நீலகிரி, தேனி, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது. மேலும், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், திருப்பத்தூர், திருப்பூர், சேலம் ஆகிய மாவட்டங்களிலும், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கரூர், திருச்சி, தஞ்சாவூர் மற்றும் தருமபுரி மாவட்டங்களிலும் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கணித்துள்ளது. சென்னையைப் பொறுத்தமட்டில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 106 டிகிரி ஃபாரன்ஹீட் வரை பதிவாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply