“எத்தனை இளைஞர்களின் குரலைத்தான் பாஜகவால் ஒடுக்க முடியும்? சிஜேபிக்கு தேவையான அனைத்து சட்ட உதவிகளையும் திமுக வழங்கும்” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “எத்தனை போராட்டக்காரர்களை இந்த அரசால் கைது செய்ய முடியும்? எத்தனை இளைஞர்களின் குரலை பாஜகவால் ஒடுக்க முடியும்? அவர்கள் சிறையில் அடைக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, எந்த அரசியல் கட்சியையும் சாராத சாதாரண பொதுமக்களும் பெருமளவில் வீதிக்கு வந்து, மக்கள் சக்தி என்னவென்பதை அவர்களுக்குக் காட்டுவார்கள்.
அஷுதோஷ் ரங்கா மற்றும் சவுரவ் தாஸ் ஆகியோருக்கு எனது ஆதரவும் தோழமையும். அவர்களுக்குத் தேவையான அனைத்துச் சட்ட உதவிகளை வழங்கவும், வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்யவும் திமுக தயாராக உள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் நேற்று காலை ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட முயன்ற அசுதோஷ் ரங்கா, சவுரவ் தாஸ் மற்றும் அஜிங்க்யா ஷிண்டே உள்ளிட்ட சிஜேபி கட்சி நிர்வாகிகளை டெல்லி காவல்துறை கைது செய்தனர்.
டெல்லி காவல்துறை திங்கள்கிழமையன்று ஜந்தர் மந்தரை போராட்டங்கள் நடத்தும் அதிகாரப்பூர்வ இடங்களின் பட்டியலிலிருந்து நீக்கியது. அதற்கு மாற்றாக, போராட்டங்கள் நடத்த ராம் லீலா மைதானம், புராரி மைதானம் மற்றும் கிழக்கு டெல்லியில் உள்ள சி.பி.டி. மைதானம் ஆகிய மூன்று மாற்று இடங்களை அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், “எத்தனை இளைஞர்களின் குரலைத்தான் பாஜகவால் ஒடுக்க முடியும்? சிஜேபிக்கு தேவையான அனைத்து சட்ட உதவிகளையும் திமுக வழங்கும்” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

