விசிக முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு, ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்த நிகழ்வில், இன்னும் 3 மாதமாவது தாங்குமா என்ற கேள்விக்குறியோடுதான் தவெக ஆட்சி நடந்து வருவதாக ஸ்டாலின் விமர்சித்தார்.
கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் விசிக சார்பில் செய்யூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பனையூர் பாபு. விசிக ஊடகப் பிரிவு முதன்மைச் செயலாளராகவும் இருந்து வந்தார். 2026 தேர்தலில் அதே தொகுதியில் சீட் மறுக்கப்பட்டதால் அதிருப்தியில் இருந்தார்.
தேர்தலுக்குப் பிறகு, தவெகவுக்கு ஆதரவளித்த விசிக, திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, அமைச்சரவையிலும் பங்கேற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விசிகவில் இருந்து பனையூர் பாபு கடந்த மே 24-ம் தேதி விலகினார்.
இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் பனையூர் பாபு தனது ஆதரவாளர்களுடன் நேற்று திமுகவில் இணைந்தார். தவெக, அதிமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்தும் 1,000-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.
இந்த நிகழ்வில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியதாவது: சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமான கருத்துகள், பிரச்சினைகளை வலியுறுத்திப் பேசக்கூடியவர் பனையூர் பாபு. ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக தனது பயணம் இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். அதற்கு சரியான இயக்கம் திமுக என்பதை உணர்ந்து இங்கு இணைந்துள்ளார்.
தவெக ஆட்சி பற்றி நான் அதிகம் சொல்லத் தேவை இல்லை. ஏற்கெனவே இந்த ஆட்சிப் பொறுப்பேற்ற நேரத்தில், ‘6 மாதங்களுக்கு இதைப் பற்றி பேசப் போவதில்லை’ என்றேன். ஆனால், 6 மாதங்களுக்கு முன்பே பேச வேண்டிய சூழ்நிலை வந்துவிடுமோ என்று அஞ்சுகிறேன்.
6, 5, 4 மாதங்கள்கூட அல்ல, இன்னும் 3 மாதமாவது தாங்குமா என்ற கேள்விக்குறியோடுதான் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார். பனையூர் பாபு பேசும்போது, ‘‘தலித் மாணவர்கள் அயலகம் சென்று படிக்கும் திட்டத்தில் ஆண்டுக்கு 10 பேர்கூட பயனடையாத நிலை இருந்தது.
ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு அமைந்த பிறகு, கடந்த 5 ஆண்டுகளில் 410 மாணவர்கள் வெளிநாடு சென்று படிக்கின்றனர்.
ஒரு மாணவருக்கு தலா ரூ.36 லட்சம் வரை அரசு வழங்கியுள்ளது. ஆனால், ஒரு கவர்ச்சியான அரசியலின் பின்னால் சென்ற மக்கள், எல்லாம் பொய் என்பதை 30 நாட்களிலேயே உணர்ந்துவிட்டனர்’’ என்றார்.

