மத யானைக்கு நிகரான திமுகவையே அடக்கி ஆண்டவர்கள் நாங்கள், எங்களைப் பார்த்து தூர்ந்து போன சக்தி எனக் கூறுவதா என தவெகவிற்கு ராஜேந்திர பாலாஜி பதிலடி கொடுத்தார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எப்போது கோபம் வருகிறதோ, அப்போது தவெக ஆட்சி முடிவுக்கு வரும் என்றும் அவருக்கு கோபம் வர வேண்டுமென அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
சிவகாசி சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, எடப்பாடி பழனிசாமி நம்மைவிட அதிகமாகப் புகழ்ந்தவர்கள் தான் இன்று அதிமுகவிலிருந்து வெளியேறியுள்ளார்கள். அதிமுகவிலிருந்து வெளியே சென்றவர்கள் எல்லாம் மண்ணைக் கவ்வப்போகிறார்கள்.
உங்களை வளர்த்த அதிமுகவிற்கு துரோகம் செய்துவிட்டு சாதாரணத் தொண்டர் சென்றால் அதில் நியாயம் உள்ளது. ஆனால் அதிமுக கட்சியை வைத்து முழுமையாகப் பொருளாதாரத்தைப் பெருக்கிக்கொண்டு எடப்பாடி பழனிசாமிக்கு துரோகம் செய்துவிட்டுச் சென்றுள்ள முன்னாள் அமைச்சர்கள் சிலர் அங்கு சென்று வேஷம் போடுகிறார்கள். மீண்டும் அவர்கள் தாய்க் கழகத்தில் இணையும் காலம் விரைவில் வரும்.

