விலைவாசியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை: தமிழக அரசு மீது பழனிசாமி குற்றச்சாட்டு

Priya
784 Views
1 Min Read

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டினார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் அரிசி ஒரு கிலோ 100 ரூபாயை எட்டிவிட்டது. சர்க்கரை கிலோவுக்கு ரூ.25 உயர்ந்துள்ளது. புளி, பருப்பு உட்பட மளிகைப் பொருட்கள் விலை சுமார் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த தவெக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து அமைச்சரிடம் கேள்வி கேட்டால், ‘எங்கே விலை உயர்ந்துள்ளது?’ என்று திருப்பிக் கேட்கிறார். விலை உயர்வால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது மிகவும் கண்டிக்கத்தக்கது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து அண்மையில் முதல்வர் தண்ணீர் திறந்தார். 45 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என அறிவித்ததால், தற்போது தண்ணீர் நிறுத்தப்பட்டுவிட்டது. சம்பா சாகுபடிக்கு ஜனவரி வரை தண்ணீர் தேவை. இதனால், பெரும்பாலான விவசாயிகள் சம்பா சாகுபடி செய்யவில்லை. திறந்த தண்ணீரும் கடைமடை பகுதிக்குச் செல்லவில்லை.

தற்போது அணையின் நீர்மட்டம் 58 அடிதான் உள்ளது. இது குடிநீருக்கே போதாது. சரியாக திட்டமிடாமல் தண்ணீர் திறந்ததால் சம்பா சாகுபடியும் பாதித்து, வருங்காலங்களில் குடிநீர் தேவைக்கும் தண்ணீர் கிடைக்காத நிலை உருவாகியுள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, கர்நாடகாவிடம் இருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நீரை பெற முதல்வர் தவறிவிட்டார். காவிரி மேலாண்மை ஆணையம் அறிவித்த பிறகும் கர்நாடகம் தண்ணீர் தராததால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply