அறநிலையத் துறை ஊழல் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்: அமைச்சர் ரமேஷ் தகவல்

Priya
621 Views
3 Min Read

இந்து சமய அறநிலையத் துறையில் கடந்த ஆட்சியில் நடைபெற்ற ஊழல் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறோம் என அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், சட்டப்பேரவை துணைத் தலைவர் ரவிசங்கர் ஆகியோர் திருச்சி அரசு போக்குவரத்து கழக வளாகத்தில் உள்ள தீரன் சின்னமலை உருவ சிறைக்கு இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முன்னதாக அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழக முதல்வர் விஜய் அனைத்து தலைவர்களும் பாராட்டத்தக்க வகையில் சிறந்த ஆட்சியை நடத்தி வருகிறார். வாக்களிக்காதவர்கள் கூட சந்தோஷமாக வாழக்கூடிய அளவிலே ஆட்சி உள்ளது.

முதல்வர் தனித்து விடப்பட்டிருப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார். உண்மையிலேயே தனித்து விடப்பட்டது யார் என ஸ்டாலினிடம் கேளுங்கள். சட்டமன்றத்திலிருந்து பேசிக்கொண்டிருந்த ஸ்டாலின் இன்று சட்டமன்ற நிகழ்வுகளை வீட்டில் இருந்து பார்க்கக்கூடிய நிலைமைக்கு தனித்து விடப்பட்டிருக்கிறார் என்பதுதான் உண்மை.

எல்லா விஷயத்தையும் பேசி பேசி தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. செயலில் காட்டினால் போதும். எங்களுடைய முதல்வர் செயலில் காட்டக்கூடியவர். ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்த ஆந்திர பெண்ணிடம் ரூ.2,000 லஞ்சம் பெற்றதாக வந்த புகார் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. அனைத்து கோயில்களிலும் ஒரு சிலரால் இதுபோன்று நடக்கிறது. இது தொடர்பாக விசாரணை பெற்று வருகிறது. அந்த விசாரணையின், அடிப்படையில் தவறுகள் நிரூபிக்கபட்டால் நிச்சயமாக யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்

உள்ளாட்சித் தேர்தலுக்காக வெறியோட காத்திருப்பதாக சீமான் சொல்லியிருக்கிறார். பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதியிலும் சாதி பார்த்துதான் வேட்பாளரை நிறுத்தினார். வெறுப்பு அரசியல் பேசி, ஒரு தலைவருக்கு எதிராக பேசுவது; இதையெல்லாம் விட்டுட்டு உண்மையிலேயே வெற்றி பெறுவதற்கான நோக்கத்தோடு பேசினால் நிச்சயமாக உள்ளாட்சி தேர்தலில் ஏதாவது ஓரிரு இடத்தில அவர் வெல்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அதை முயற்சி செய்ய வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

காவிரி கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டுவது தொடர்பான கோரிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் ஆய்வு நடத்தி வருகிறார். நிதிநிலையை பொறுத்து என்னென்ன திட்டங்களை எப்படி கொண்டு வர வேண்டும் என முடிவெடுப்போம். அமைச்சர் செந்தில் பாலாஜி ஓடி ஒளியவில்லை என்றால் இத்தனை நாள் எங்கிருந்தார்? நீதிமன்ற நடைமுறைகளை தைரியமாக எதிர்கொண்டு நின்று இருக்க வேண்டியதுதானே? அதெல்லாம் சும்மா வெளியில் வந்து வீரத்துக்கு கூறுவதுதான்.

ஊடகங்களில் பேசுபவர்கள் ஏதாவது பேசுவார்கள். நிச்சயமாக இந்த ஆட்சியை பொறுத்த வரை, எங்கள் தலைவர் சொன்னது போல நாங்களும் ஊழல் செய்ய மாட்டோம். ஊழல் செய்தவர்களை விட மாட்டோம். செந்தில் பாலாஜி நிச்சயமாக தண்டிக்கப்படுவார். தவறு செய்யும் கீழ்மட்ட அதிகாரிகள் முதல் உயர்மட்ட அதிகாரிகள் வரை அனைவர் மீதும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்து சமய அறநிலையத் துறையில் கடந்த ஆட்சியில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடுவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறோம். கடந்த ஆட்சியில் என்னென்ன கோயில் சொத்துக்கள் அபகரிக்கப்பட்டிருக்கின்றன, என்னென்ன தவறுகள் நடந்திருக்கிறது என அனைத்தையும் ஆய்வு செய்து வருகிறோம்.

அதன் அடிப்படையில் யாரெல்லாம் குற்றங்களில் ஈடுபட்டிருகிறார்கள் என கவனித்து வருகிறோம். இந்து சமய அறநிலையத் துறையை பொறுத்த வரை நிச்சயமாக ஊழலை ஒழிப்போம்.

இதுவரைக்கும் இருந்த ஊழல்களை எல்லாம் நாங்கள் ஒழித்துட்டு, கோயில் சொத்துக்களை முறைகேடாக யார் யாரெல்லாம் பயன்படுத்தி இருக்கிறார்கள்; முறைகேடாக என்ன நடந்திருக்கிறது என அனைத்தையும் விசாரணை செய்து வருகிறோம். ஒவ்வொன்றாக விசாரித்து இருக்கறோம். அதற்கான தனித்தனி குழுக்கள் விரைவில் அமைக்கப்படும்.

ஒவ்வொரு கோயிலின் சொத்துக்களையும் பாதுகாக்கவும், அதில் நடந்த முறைகேடுகளை கண்டுபிடிக்கவும் குழுக்கள் அமைக்க இருக்கிறோம். தொடர் நடவடிக்கையால் இறுதியில் வெளியாகும் பலனை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள். கோயில் சொத்துக்கள் அனைத்தும் பாதுகாக்கப்படும்” என்று அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply