கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளில் சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்த முன்னுரிமை: ஐகோர்ட் உத்தரவு

Priya
24 Views
1 Min Read

கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் சுற்றித்திரியும் தெரு நாய்களை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்துவது தொடர்பாக அறிக்கை அளிக்க தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தெரு நாய்களிடம் இருந்து பொதுமக்களை பாதுகாப்பது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நான்கு மாத காலத்தில் 2 லட்சத்து 63 ஆயிரம் பேரை தெரு நாய்கள் கடித்துள்ளதாகவும், 17 பேர் இறந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன எனச் சுட்டிக்காட்டியது.

கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் இனப்பெருக்க கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக பிடிக்கப்படும் நாய்களை மீண்டும் அதே பகுதிகளில் விடாமல், பராமரிப்பு மையங்களுக்கு அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் போதுமான இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையங்களை ஏற்படுத்த வேண்டும், தடுப்பூசி மையங்களில் போதுமான கால்நடை மருத்துவர்கள், ஊழியர்களை நியமிக்க வேண்டும், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் சுற்றித்திரியும் தெரு நாய்களை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவுகளை அமல்படுத்தும் வகையில், அனைத்து உயர் நீதிமன்றங்களும் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்து, கண்காணிக்கவும் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது தொடர்பாக நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு, புதுச்சேரி மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்தனர்.

மேலும், கல்வி நிறுவனங்களில் சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply