இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கவும் ஒன்றிய அரசு மிக முக்கியமான ஒரு முடிவை எடுத்துள்ளது. நாடு முழுவதும் 20% எத்தனால் கலந்த பெட்ரோல் (E20) வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்த கட்டமாக 85% எத்தனால் மற்றும் 15% பெட்ரோல் கொண்ட E85 எரிபொருள் பயன்பாட்டைக் கொண்டு வர புதிய வரைவு விதிகளை (Draft Rules) வெளியிட பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றங்கள் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக, உள்நாட்டிலேயே உற்பத்தியாகும் எத்தனால் பயன்பாட்டை அதிகரிக்க அரசு இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இந்த E85 எரிபொருள் என்பது வழக்கமான பெட்ரோல் இன்ஜின்களுக்கு ஏற்றதல்ல. இதற்கெனவே பிரத்யேகமாகத் தயாரிக்கப்படும் ‘பிளக்ஸ்-பியூயல்’ (Flex-Fuel Vehicles – FFVs) வாகனங்களில் மட்டுமே இதனைப் பயன்படுத்த முடியும். இந்த வாகனங்கள் 100% எத்தனால் முதல் சாதாரண பெட்ரோல் வரை எதிலும் இயங்கும் திறன் கொண்டவை. இதற்கான ஆரம்பகட்ட வாகன சோதனைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுவிட்டதாகவும், வாகனத் தயாரிப்பு நிறுவனங்களுடன் ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இதற்கான வரைவு அறிவிக்கை வெளியிடப்பட்டு, அடுத்த ஒரு சில ஆண்டுகளில் வணிக ரீதியாக E85 புழக்கத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பது (E20) ஏப்ரல் 1, 2026 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கரும்பு, சோளம் மற்றும் தானியங்களில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனால், பெட்ரோலை விடச் சுற்றுப்புறச் சூழலுக்குக் குறைவான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. E85 எரிபொருள் அறிமுகமாவதன் மூலம் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு மிச்சப்படுத்தப்படுவதோடு, விவசாயிகளுக்கும் அவர்களின் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க வழிவகை ஏற்படும். ஒரு லிட்டர் எத்தனால் விலை பெட்ரோலை விடக் குறைவாக இருக்கும் என்பதால், நீண்ட கால அடிப்படையில் இது வாகன ஓட்டிகளுக்கும் லாபகரமாக அமையும்.
இருப்பினும், இந்த உயர் எத்தனால் கலப்பு முறையால் வாகனங்களின் மைலேஜ் (Mileage) சுமார் 25% முதல் 30% வரை குறைய வாய்ப்புள்ளதாகத் தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இதனைச் சரிசெய்யும் வகையில் இன்ஜின் வடிவமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். பெட்ரோல் பங்குகளில் E85-க்காகத் தனி விநியோகக் கட்டமைப்பு (Dispensing units) மற்றும் சேமிப்புக் கிடங்குகள் உருவாக்கப்பட வேண்டும். அரசின் இந்த மெகா திட்டம் அமலுக்கு வரும்போது, இந்தியா பசுமை எரிசக்தி இலக்கை நோக்கி மிகப்பெரிய அடியை எடுத்து வைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

