“மாணவர்களை தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறது காங்கிரஸ்” – டிடிவி தினகரன் சாடல்

Priya
13 Views
2 Min Read

“தனது கடந்த கால தவறுகளை மூடி மறைத்து, மாணவர்களின் எதிர்கால நலன் எனும் முகமுடியை அணிந்து கொண்டு, காங்கிரஸ் முன்னெடுக்கும் போராட்டம், அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியே” என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “நீட் தேர்வு என்ற சொல்லையே நாட்டிற்கு அறிமுகப்படுத்திய காங்கிரஸ் இன்று அதை எதிர்த்து போராடுவது அரசியல் கேலிக்கூத்து. தமிழகத்தில் அனுமதியின்றி மாணவர்கள் போராடினால் அடக்குமுறை, அதுவே டெல்லியில் அனுமதியின்றி போராடிய ராகுல் காந்தி கைது செய்தால் அது ஜனநாயகப் படுகொலையா ?

2010-ம் ஆண்டு, மத்தியில் ஆட்சியில் இருந்தபோது மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு என்ற கருத்தை உருவாக்கி, நீட் தேர்விற்கு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்த காங்கிரஸ் கட்சி, இன்று அதே நீட் தேர்வுக்கு எதிராக தெருக்களில் இறங்கிப் போராடுவது மாணவ, மாணவியர்களின் உணர்வுகளை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தும் கீழ்த்தரமான செயலாகவே பார்க்க வேண்டியுள்ளது.

நீட் தேர்வை எதிர்த்து தற்போது போலிப் போராட்டம் நடத்தும் காங்கிரஸ், 2010-ம் ஆண்டு தான் ஆட்சியில் இருந்த போது நீட் தேர்வு அறிமுகப்படுத்த முயன்றது தவறு என்பதை தற்போதாவது ஒப்புக் கொள்கிறதா? அல்லது அப்போது எடுத்த முடிவு சரி என்றால் தற்போதைய போராட்டங்கள் அரசியல் காரணங்களுக்காகவா ? என்பதை நாட்டு மக்களுக்கு முதலில் விளக்க வேண்டும்.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக சாலைகளில் இறங்கி போராடிய மாணவர்கள் மீது காவல்துறையை ஏவி, வலுக் கட்டாயமாக கைது செய்து விட்டு, பொதுமக்களுக்கு எத்தகைய சிரமத்தையும் ஏற்படுத்தாமல், முறையாக முன் அனுமதி பெற்று அதற்குரிய இடத்தில் அமைதியாக போராடலாம் என அதிகாரத் தொணியில் பதிலளிக்கும் தவெக அரசு, டெல்லியில் பிரதமர் மோடியின் இல்லம் முன்பாக எவ்வித அனுமதியும் பெறாமல் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் போராட்டம் நடத்திய ராகுல் காந்தி கைது செய்திருப்பது ஜனநாயகப் படுகொலை என கூறுவது முன்னுக்கு பின் முரணாக தெரியவில்லையா ?

தனது கடந்த கால தவறுகளையும், முடிவுகளையும் மூடி மறைத்து, மாணவ, மாணவியர்களின் எதிர்கால நலன் எனும் முகமுடியை அணிந்து கொண்டு காங்கிரஸ் கட்சியினர் முன்னெடுக்கும் இப்போராட்டம், மாணவ, மாணவியர்களை தூண்டிவிட்டு அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியே தவிர, மாணவ, மாணவியர்களின் நலனை காக்கும் போராட்டம் அல்ல என்பதை நாட்டு மக்கள் அனைவரும் நன்கு அறிவர் என்பதை இந்நேரத்தில் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.” என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply