“முதல்வர் விஜய்யின் இயலாமை தற்போதுதான் வெளிப்படுகிறது” – அப்பாவு விமர்சனம்

Priya
37 Views
2 Min Read

“முதல்வர் பணி ஏதோ 6 மணி நேரம் ஷூட்டிங் முடிந்ததும் வீட்டுக்கு சென்று ஓய்வு எடுப்பது போன்று கிடையாது. 24 மணி நேரமும் பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும். முதல்வர் விஜய்யின் இயலாமை தற்போதுதான் வெளிப்படுகிறது” என முன்னாள் சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழக முதல்வர் கையில்தான் காவல் துறை, உள்துறை உள்ளது. இந்தப் பணி ஏதோ 6 மணி நேரம் ஷூட்டிங் முடிந்ததும் வீட்டுக்கு சென்று ஓய்வு எடுப்பதுபோன்ற பணி கிடையாது. 24 மணி நேரமும் பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

கரூரில் இவர் பங்கேற்ற கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்துவிட்டனர். ஆனால் அவர் தனி விமானம் மூலம் வீட்டுக்கு வந்துவிட்டார். ஆனால் அப்போதைய முதல்வர் இரவோடு இரவாக அனைத்து உதவிகளையும் செய்தார். தற்போதைய முதல்வரால் இதுபோன்ற பணிகளை செய்ய முடியவில்லை என்றால், உள்துறையை தனது அமைச்சரவையில் யாருக்காவது கொடுத்துவிடலாம். வேண்டுமென்றால் ஒப்புக்கு சப்பாக ஒரு துறையை கையில் வைத்துக் கொள்ளலாம்.

பெண்கள், குழந்தைகள் மற்றும் சட்டம் – ஒழுங்குகளை காக்கும் பணி ஒரு நாட்டின் முதல்வருக்கு கட்டாயம் உள்ளது. அதை மறைப்பதற்காக, அவர் பொறுப்பேற்ற நாள் முதல் இது பல மடங்கு பெருகி வருவதால் அவர் மற்றவர்கள் மேல் பழி போடுகிறார். இது இயலாமையின் வெளிப்பாடு. எந்த முதல்வராவது ‘எனக்கு வாயில் நல்லா வருது’ என சொல்வார்களா?

அந்த அல்லு சில்லு கட்சியில்தான், 25 நபர்களை ஓட்டு போட வைக்க, புஷ்பா பட பாணியில் சோஃபா செட்டை முன்னர் அனுப்பிவிட்டு அவரும் சென்றார். அவர்கள் அனைவரும் தற்போது புலம்புகிறார்கள்.

8 அமைச்சர் பதவி தருவதாக சொல்லிவிட்டு, தற்போது எங்களை ரோட்டில் விட்டுவிட்டனர் என சொல்கிறார்கள். இது உண்மையா என தவெகவிடம் கேளுங்கள். எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சியையே காலி செய்துவிட்டனர்.

மக்களின் கோரிக்கையை ஏற்று, முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அம்பா சமுத்திரம் தொகுதியில் நிற்க வேண்டும். அண்ணா, காமராஜர் போன்றவர்கள் அனைவரும் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர். இதை மிகப் பெரிய பாதிப்பு என சொல்லிவிட முடியாது. ஐந்து தொகுதியில் தற்போது தேர்தல் வரவிருக்கிறது. மு.க.ஸ்டாலின் சுட்டிக் காட்டும் நபர் தான் வெற்றி பெறுவார். முதல்வர் விஜய்யின் இயலாமை தற்போது தான் வெளிப்படுகிறது” என்று அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply