வெற்றிப் பயணத் திட்டத்தை வரவேற்கிறோம், இதனால் போக்குவரத்துக் கழகங்களின் வருவாய் இழப்பை தமிழக அரசு முழுமையாக ஈடு செய்ய வேண்டும் என ஏஐடியுசி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் ரா.ஆறுமுகம் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் வரும் அக்.2-ம் தேதி முதல் வெற்றிப் பயணம் திட்டத்தின் கீழ் மகளிர் கட்டணமின்றி பயணம் செய்யும் வசதி விரிவுபடுத்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளதை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர்கள் சம்மேளனம் ஏஐடியுசி வரவேற்கிறது.
மகளிரின் பொருளாதாரச் சுமையை குறைத்து, அவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அன்றாட பயணத்துக்கு உதவும் வகையில் செயல்படுத்தப்படும் இத்தகைய சமூக நலத் திட்டங்கள் தொடர்ந்து நடைமுறையில் இருக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
ஆனால், இத்திட்டத்தை செயல்படுத்துவதால் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை தமிழக அரசு உடனடியாகவும் முழுமையாகவும் ஈடு செய்ய வேண்டும்.
தற்போதைய உத்தேச மதிப்பீட்டின்படி, இத்திட்டத்துக்காக ஆண்டுக்கு சுமார் ரூ.6 ஆயிரம் கோடி செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சுமார் 10 ஆயிரம் நகரப் பேருந்துகளில் ஒரு பேருந்துக்கு சராசரியாக நாளொன்றுக்கு ரூ.5 ஆயிரம் வருவாய் இழப்பு ஏற்பட்டால், மாதத்துக்கு சுமார் ரூ.1,500 கோடியும், ஆண்டுக்கு சுமார் ரூ.18 ஆயிரம் கோடியும் வருவாய் இழப்பு ஏற்படும் நிலை உருவாகும்.
எனவே, திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு, உண்மையில் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை முழுமையாக ஈடு செய்ய வேண்டும்.
கடந்த ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட ‘விடியல் பயணம்’ திட்டத்தின் கீழ் சாதாரண நகரப் பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றி பயணம் செய்வதற்காக பட்ஜெட்டில் சுமார் ரூ.3,200 கோடி ஒதுக்கப்பட்டது.
அந்தத் தொகையே போதுமானதாக இல்லாத நிலையில், தற்போது விரிவுபடுத்தப்படும் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் உண்மையான வருவாய் இழப்புக்கு இடையேயான வேறுபாட்டை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும், 15-வது ஊதிய ஒப்பந்தக் கோரிக்கைகளின்போது, மகளிர் கட்டணமின்றி பயணம் செய்யும் பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு ஏற்படும் வசூல் படி இழப்பை ஈடு செய்ய வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், அந்தக் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

